தமிழ் மொழித் திருவிழா

பழந்தமிழகத்தில் வரலாற்று, பண்பாட்டு வளர்ச்சியும் நகரமயமாக்கமும் 

வீ.செல்வகுமார்


தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் தொல்பழங்கால மக்கள், அதாவது   நவீன மனிதர்களின் மூதாதையர்கள் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர். இக் கருத்தைச் சென்னைக்கருகில் உள்ள கொற்றலையாற்றுப் படுகையில் கிடைக்கும் கற்கருவிகள், மண்ணடுக்குகள் ஆகியவற்றை இராபர் புரூஸ் பூட், வில்லியம் கிங், பானர்ஜி செய்த ஆய்வுகளும் அவர்களைத் தொடர்ந்த சாந்தி பப்பு அவர்களின் அண்மைக்கால ஆய்வுகளும் உணர்த்துகின்றன. கைக்கோடரி என்னும் பெரிய கருவிகளைப் பயன்படுத்திய இத் தொல்மனித இனம் வேட்டையாடி உணவு சேகரித்தது. எனவே, ஒரு மனித மூதாதையர் இனம் தமிழகத்தில் அக்காலத்திலிருந்து வாழ்ந்திருந்தனர் என்பது தெளிவு. ஆனால், காலப்போக்கில் இவர்கள் என்ன ஆயினர் என்பதும், இவர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சி என்ன என்பதும்   நமக்குத் தெரியவில்லை. இவர்களுடைய திறனை நாம் குறைத்து மதிப்பிட முடியாது, மிக அழகாக, கருவிகளை இயற்கையான இலைகளின் வடிவில்  நேர்த்தியாக, சமச்சீராக (symmetry) உருவாக்குவதில் இவர்கள் வல்லவர்களாக இருந்தனர். தமிழகப் பண்பாட்டு வரலாறு எனும் ஆலமரத்தில் இவர்களின் விழுது முதல் விழுதாகலாம். தமிழகப் பண்பாட்டு மரபில் இவர்களது விழுதின் தொடர்ச்சி உண்டா என்பது  நமக்குத் தெரியவில்லை.

ஹோமோ சேப்பியன் எனப்படும் நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவிலும், தமிழகத்திலும் படிப்படியாகக் குடியேறி இருந்திருக்கலாம் என அண்மைக்கால மரபணு ஆய்வுகள் சுட்டுகின்றன. இக்காலத்திலிருந்து மனிதர்கள் குழுக்களாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழத்தொடங்கினர். இதைத் தொல்பழங்காலத்தின் இறுதி நிலை எனலாம். 
தமிழக வரலாற்றில் நுண்கற்காலம் முதல் தொடர்ச்சியான பண்பாட்டு வளர்ச்சி இருந்து வருகின்றது என்பதைத் தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. இக்காலத்தில் வேட்டையாடி உணவு சேகரித்த குடிகள் வாழ்ந்துவந்தனர். மிகச் சிறிய முக்கோண, பிறை வடிவக்கருவிகள், கூர்முனைகள், சுரண்டிகள் ஆகியவற்றைக் கற்களில் செய்து இக்கால மக்கள் பயன்படுத்தினர். குவார்ட்ஸ் எனப்படும் சிக்கிமுக்கி கற்கள், பளிங்குக் கற்கள், செர்ட் எனப்படும் பல நிறத்தாலான கற்களை இவர்கள் பயன்படுத்தினர். இவர்கள் நாடோடிகளாக இடத்திற்கு இடம் புலம்பெயர்ந்தும், குகைகளிலும், தற்காலிக சிறு குடிசைகள் அமைந்த்தும் வாழ்ந்திருக்கலாம். இக்காலம் சுமார் 10,000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னர் தொடங்கியதாகும். இவர்களைத் தமிழகத்தின் தொன்மையான அல்லது பழங்குடிகளில் ஒரு குழுவினர் எனக் கருதலாம். இவர்கள் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், திரிந்த பாலைத் திணைகளில் வாழ்ந்தனர். இவர்களுடைய சான்றுகள் சென்னைப் பகுதி, தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர்-மருதமலை, தஞ்சாவூர்- நாகப்பட்டிணம்-திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை-குண்டாற்றுப் பகுதி, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி-தேரி மணற்குன்றுகள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் மிகப்பரவலாகக் கிடைத்துள்ளன. எனவே, தமிழகம் முழுதும் வாழ்ந்த இப்பழங்குடிகள் வேட்டையாதல், மூலிகை அறிவு, சுற்றுச்சூழல் அறிவைப் பெற்று தமிழகப் பண்பாட்டின் அடித்தளத்தின் ஒரு தூணை உருவாக்கினர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் நெய்தல், பாலை, குறிஞ்சித் திணைகளின் பண்பாட்டுக் கருவை, வாழ்க்கை முறைகளை உருவாக்கினர் எனலாம்.  இவர்கள் என்ன மொழி பேசினர் என்பது ஒரு புரியாத புதிர் எனலாம்.  இவர்கள் திராவிட மொழிகளின் மூத்த மொழியைப்பேசினரா? அல்லது வேறு மொழிக் குடும்பத்து மொழியைப் பேசினரா என்பது  தெரியவில்லை. ஆனால் இக்கால மனிதர்களின் மரபணு இன்று தமிழகத்தில் வாழும் மக்களிடையே உள்ளது என்பது தெளிவாகும்.  தமிழகப்பண்பாடு எனப்படும் ஆல மரத்தில் இவர்களது விழுதுகளும் ஒன்றாகும்.


 படம் நுண்கற்காலக் கருவிகள்

இக்காலத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்திருந்தன. இலங்கையில் வெட்டர் எனப்படும் வேடர் குழுக்கள் இருந்தன. இலங்கையில் நுண்கற்கால மக்களின் சான்றுகள் கிடைத்துள்ளன.  மேலும் மனித இனங்களின் எலும்புக்கூடுகளும் கிடைத்துள்ளன. சுமார் 25000 ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன இலங்கையில். இக்கால வரலாற்றை இலங்கை இந்தியா எனப் பிரிக்க முடியாது. தமிழகத்தில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் குழுக்களுடன் தொடர்புடைய ஒரு குழு இலங்கையிலும் வாழ்ந்தது என்பது உறுதியாகும். 

தமிழகத்தின் தொல்பழங்கால வரலாற்றைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில் இந்தியா முழுமையும் உருவான பண்பாடுகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் திராவிட மொழிக்குடும்ப மொழிகளும், ஆஸ்திரோஆசிய மொழிக்குடும்ப மொழிகளும் தொல்பழங்காலத்தில் பரவியிருந்தன என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள் மத்திய ஆசியா பகுதியிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் என்ற கருத்து அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமையான பண்பாட்டுப்பரவல் அக்காலத்தில் நடந்திருந்தது. ஆனால், இவர்களின் மொழிகள், பண்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொள்வது எளிதல்ல.  ஆனால், வட இந்திய, மத்திய இந்தியப் பகுதிகளிலும் திராவிட மொழி பேசியவர்கள் இருந்தனர்.
சிந்து வெளிப்பண்பாட்டு மக்கள் தழைத்தோங்கிய காலத்தில் அதாவது பொ.ஆ.மு. 2600 (சுமார் 4600 ஆண்டுகளுக்கு முன்னர்) லிருந்து 1900 வரை இந்தியாவின் பல பகுதிகளிலும் பல மக்கள் குழுக்கள் வாழ்ந்தன. புதியகற்காலம் எனப்படும் ஆடுமாடு வளர்த்த, வேளாண்மை செய்த பண்பாட்டு மக்கள் குழுக்கள், தென்னிந்தியாவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருந்தனர். இவர்கள் வாழ்ந்த இடங்களில் சாம்பல் மேடுகள், மாட்டுத் தொழுவத்தின் சான்றுகள், பானையோடுகள், கற்கருவிகள், மெருகேற்றப்பட்ட பானை வகைகள் ஆகியவை கிடைக்கின்றன.  இவர்களின் ஒரு பகுதியினர் தமிழகத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர். குறிப்பாக ஆடுமாடு வளர்த்து வேளாண்மை செய்த இப் பண்பாட்டு மக்கள் குழுக்கள், தமிழகத்தின் வடமேற்கு – தருமபுரி, கொங்குப் பகுதிகளில் சுமார் 4000-3000 ஆண்டுகளுக்கு முன்னர் பரவினர். இவர்கள் ஆடு-மாடுகள் வளர்த்து சிறுதானிய வேளாண்மையைச் செய்தவர்கள். தமிழகத்தில் ஓரளவு நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கியவர்கள் இவர்கள் பானைகளைச் செய்தனர். தங்களக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே செய்திருக்கவேண்டும். குயவர் என்ற சமூகப்பிரிவு உருவாகவில்லை.   இவர்கள் படிப்படியாகத் தமிழகத்தில் வளர்ந்தனர். சில வேட்டையாடும் குழுக்களும் ஆடுமாடுகள் வளர்ப்பையும், சிறுதானிய வளர்ப்பை பரிமாற்றம், இவர்களிடமிருந்து பெற்று மாறியிருக்கலாம். இவ்வாறாக, முல்லை நிலவாழ்க்கை இம்மக்களால் உருவக்கப்பட்டது. இத்தகைய முல்லை நிலப் பண்பாட்டு உருவாக்கம் இரும்புக் காலத்திலும் தொடர்ந்தது. புதிய கற்காலப் பண்பாடு ஒரளவு சிறிய அளவில் உருவெடுத்தது. தமிழகப் பண்பாட்டின் ஒரு விழுது இக்கால மக்கள் எனலாம். 
புதிய கற்காலத்தில் மெருகேற்றப்பட்ட கோடரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இவை இரும்புக்காலத்திலும், வரலாற்றுக் காலத்திலும் பின்னர் இன்று வரையும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவை மட்டுமே இரு தொல்லியல் இடத்தை புதியகற்கால இடம் என நிரூபிக்க போதுமானவை அல்ல. பானையோடுகளும் பிறசான்றுகளும் அவசியமாகும். தமிழகத்தில் பல இடங்களில் இவை கோயில்களில் வழிபடப்படுகின்றன. 
 
சிந்துவெளிப்பண்பாடுகள் வீழ்ந்த பின்னர் மக்கள் தெற்கு நோக்கி குடிபெயர்ந்தனரா? என்பதும், இரும்புக் காலத்தில் தமிழகத்தில் குடிபெயர்ந்த மக்கள் யார் என்பதைப் பற்றியும் நமக்கு ஒரு தெளிவான புரிதல் இல்லை. தமிழகத்திற்கு கடல் வழியும் மக்கள் குடிபெயர்ந்து இருக்கலாம். இரும்புக்காலத்திற்கு முன்னர் மக்கள் உருவாக்கம் குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும். குறிப்பாக பொது ஆண்டு முறைக்கு முந்தைய 1900 முதல் 600 பொ.ஆ.மு வரை இந்தியாவில் எந்தவகையான பண்பாட்டுப்பரவல் இருந்தது என்பதை முழுமையாக ஆராயாமல் நாம் இதற்கு விடை காண இயலாது.  இரும்புக் காலத்தில் மக்கள் புலம்பெயரல் தென்னகத்தில் இருந்தது. இவர்களும் தமிழகப்பண்பாடில் ஒரு விழுது எனலாம்.  
சிந்துவெளியின் தொடர்ச்சியாக அறிஞர்கள் கூறுவது மூன்று வகையான கருத்துக்கள் நிலவுகின்றன: 1) சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் அல்லது திராவிட முந்துமொழியில் எழுதப்பட்டுள்ளன; 2) இரும்புக்காலப் பானையோட்டுக் குறியீடுகள் சிந்துவெளி எழுத்தை ஒத்துள்ளன; 3) சிந்துவெளி ஊர்ப் பெயர்கள் திராவிட ஊர்ப் பெயர்களாக உள்ளன; 4) மரபணு ஆய்வின் வழி வெளிப்படும் ஆய்வுமுடிவுகள்; என்பனவாகும். ஆனால், மரபணு ஆய்வு முடிவுகள் பலவிதமாக விளக்கப்பெறுகின்றன.

சிந்துவெளி எழுத்துக்கள் இன்னும் முழுமையாகப் படித்தறியப்படவில்லை. இது நமது புரிதலுக்கு ஒரு தடையாக உள்ளது. இரா. பாலகிருஷ்ணன் சிந்துவெளி ஊர்ப்பெயர்கள், திராவிட ஊர்ப்பெயர்கள் குறித்த ஒற்றுமையை வலியுறுத்துகிறார். இதை ஒரு கருதுகோளாக எடுத்துக் கொள்ளலாம். இதில் மேலாய்வுகள் செய்து ஊர்ப் பெயர்களின் தொடர்பை காலங்காலமாக ஆராயலாம். இந்த ஆய்வின் ஒரு முக்கியமான வெளிப்பாடு தமிழகத்தின்  வரலாற்றை தமிழகத்தில் கிடைக்கும் சான்றுகளை மட்டும் வைத்தே ஆராய இயலாது. ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாறும், அதற்கப்பாலுள்ள பகுதிகளின் வரலாறும் ஒருமித்து ஆராயப்பெற வேண்டும் என்பதாகும். 
சங்க இலக்கியத்தில் வரும் கருத்துக்கள், சூழலியல் கருத்துக்கள், தொன்மங்களும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். சங்க காலப் புலவர்கள் இமயம் மற்றும் பல வட இந்திய பண்பாட்டு நிலவியல் குறித்த தகவல்களை அறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

எனவே சிந்துவெளிப்பண்பாடுகளுடன் தொடர்புடைய மக்கள் குழுக்கள் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்திருக்கலாம். இதைக்குறித்து கூடுதல் ஆய்வு வேண்டும். அவ்வாறெனில் இவர்களும் தமிழகப்பண்பாட்டு மரபின் ஒரு விழுது எனலாம்.  

இரும்புக்காலம் சுமார் 3000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னர் தமிழகத்தில் தொடங்கியது. கறுப்பு-சிவப்புப் பானை வகைகள்  புதிய கற்காலத்தின் இறுதிப் பகுதியில் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்தன. புதிய வகை கறுப்புசிவப்பு பானைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் சில இராஜஸ்தானத்தில் உள்ள செப்புக்காலப் பண்பாட்டின் பானை வகைகளை ஒத்தவையாகும்.  
இக்காலத்தில்தான் மருத நிலத்தில் மக்கள் வாழ்த்தொடங்கினர். வேளாண்மை பரவத்தொடங்கியது. மக்கள் குடிப்பெயரலும் தமிழகத்தில் தொடர்ந்தது. சிந்துவெளிப் பண்பாட்டின் சில மக்கள் குழுக்கள் தமிழகத்திற்கு வந்திருந்தால் அது இரும்புக்காலத்தின் தொடக்கம் அல்லது புதியகற்காலத்தின் இறுதியில்  நடந்திருக்க வேண்டும்.  சிந்திவெளியுடன் தொடர்புடைய சில மக்கள் குழுக்கள் தென்னிந்தியா, தமிழகத்திற்கு வந்தார்களா என்பது ஆராயப்பட வேண்டும். ஆனால், சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய கார்னீலியன் மணிகள், சங் வளையல்கள் போன்ற பல பொருள்கள் இரும்புக்காலத்திலும் பயன்பாட்டிற்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிந்துவெளி எழுத்துக்கள் படித்தறியப்படாத வரையும், தொல்லியல் சான்றுகள் முழுமையாக வெளிப்படாதவரையும் இதை ஒரு முற்றுப்பெறாத விவாதம் என வைத்துக்கொள்ளலாம். 

இரும்புக்காலத்தில் பண்பாடு விரிவடைந்து தமிழகத்தின் சங்க கால, வரலாற்றுத் தொடக்க காலத்தின் அடித்தளம் இடப்பெற்றது. தமிழகத்தில் அரசுருவாக்கத்தின் அடித்தளம் இடப்பெற்றது. வேளிர், கிழவன், கோ போன்ற தலைவர்கள் தோன்றியிருக்கவேண்டும். வேளாண் ஊர்கள் தோன்றின. இரும்புக்கருவிகள் உருவாக்கப்பட்டன. பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உருவாக்கப்பட்டன. குயவர்கள், கொல்லர் என தொழிற்குடிகள் உருவாகியிருக்கவேண்டும். மேலும் குடிகள் பல வகை குடிகள் உருவாகின. இவை சங்க இலக்கியத்தில் சுட்டப்படுகின்றன. தமிழகத்தின் இசைப்பாடல் மரபு இக்காலத்திலோ அதற்கு முன்னரோ தோன்றியிருக்க வேண்டும். 
தமிழகத்தில் குறிஞ்சியிலிருந்து கடற்கரைப் பகுதிக்கு பண்பாடு வளர்ந்தது என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. அனைத்து திணைகளிலும் வேட்டைப் பண்பாடு நிலவியிருந்தது எனத் தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. படிப்படியாக உருவாகி பல நிலங்களில் விளையும் பல்வகைப் பயிர்கள் போல  ஐந்திணைகளில் இவ்வாறு பண்பாடுகள் வளர்ந்தன.

இரும்புக்காலத்தில் பலவகை ஈமச்சின்னங்கள் எழுப்பப்பெற்றன. இந்த ஈமச்சின்னங்களை அலெக்சாண்டர் ரீ, எ.சுப்பராயலு, கா.இராசன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இவற்றில் பலவித கார்னீலியன் மணிகள், இரும்புப் பொருள்கள், வெண்கலப்பொருள்கள் கிடைக்கின்றன. 

இரும்புக்கால ஈமச்சின்னங்களில் கற்பதுக்கை, கல்வட்டம், நெடுங்கள், தாழிகள், ஈமத்தொட்டி எனவும், கேரளாவில் குடைக்கல் தொப்பிக்கல் என்னும் வகைகளும் அடங்கும். ஈமச்சின்னங்களில் காணப்படும் இரும்புப் பொருள் போர், பூசல் தொடர்பானவையாக உள்ளன. இறந்தவர்களை வழிபட்டு, வீரர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எடுக்கும் வழக்கம் இக்காலத்தில்தான் தொடங்கியது. இச்சின்னங்கள், சங்க இலக்கியத்தில் வரும் குறிப்புகளையும் பல வித போர் மரபுகளையும் உணர்த்துகின்றன.  தமிழகத்தின் குகைகளில் காணப்பெறும் சில ஓவியங்கள் இக்காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.

மல்லபாடி குதிரைவீரர்கள் சண்டையிடும் காட்சி, படம் காந்திராஜன்
இரும்புக் காலத்தின் இறுதியில்தான் எழுத்தின் அறிமுகம் தொடங்கியது. நகரமயமாக்கம் தொடங்கியது. கொடுமணல், பொருந்தல், கீழடி அகழாய்வுகளின் அடிப்படையில் இதன் காலம் பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு எனப்படுகின்றது. இதை ஒரு கருதுகோளாக முன்வைத்து விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்பெறவேண்டும். 

இவ்வாறாகப் பல காலங்களில் குடிபெயர்ந்து உருவான மக்கள் குழுக்களின், பண்பாட்டு மரபுகள் எனும் விழுதுகளின் தொகுப்புதான் இந்தியாவும், தமிழகமும். இவ்விழுதுகளின் தற்கால  அடையாளத்தை,  மக்களை எளிதில் இனம் காண்பது கடினமாகும். துல்லியமான ஆய்வுகள் சில கூறுகளை நமக்கு அடையாளப்படுத்தலாம்.

சங்க இலக்கியத்தைக் குறித்து ஆராய்ந்த நாம் அதற்கு முந்தைய புதிய கற்காலம், இரும்புக்காலத்தைக் குறித்து முறையாக ஆராயவில்லை. இலக்கியம் மொழியுடன் இணைந்து தமிழகத் தொல்லியலும் ஆராயப்படவேண்டும். தமிழகத் தொல்லியல் துறை தற்போது நல்ல முயற்சிகளை மேற்கொள்வது வரவேற்கத்தக்கதாகும். தமிழகத்தின் தொன்மை வரலாற்றை நன்கு அறியவேண்டும் என்றால் தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவமும், நல்கையும் அளிக்கவேண்டும். ’தொல்லியல் வரலாறு இல்லை’ என்று பழம்பஞ்சாங்கம் போல் வாதிட்டால் தமிழகத்தின் முறையான வரலாற்றை அறிவியல்பூர்வமாக நாம் எழுத இயலாது. தமிழகத்தின் தொல்பழங்கால வரலாற்றை இதுவரை கண்டோம், எழுத்து உருவாகிய தமிழகத்தின்  நகரமயாக்கம்குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்.

படம்: காந்திராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

SCROLL FOR NEXT