பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று கஜகஸ்தான் சென்றடைந்தார். கஜகஸ்தானில் இன்றும் நாளையும் (ஜூன் 8, 9) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் தரையிறங்கிய மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கஜகஸ்தான் அதிபர் நர்சுல்தான் நாசர்பேயேவுடன் நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார். அந்த நாட்டுடன் சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை கடந்த 1996-ஆம் ஆண்டு உருவாக்கின. அந்த அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளராக உள்ளன.
இந்நிலையில், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் முறைப்படி அந்த அமைப்பில் உறுப்பினராக இணைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதற்காக இருநாள் பயணமாக கஜகஸ்தானுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.
அங்கு பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று ஏற்கனவே வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.