தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிள்ள நிலையில், போடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் ஏப்.17-ஆம் தேதி வரை 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இதில், போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில், போடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சனிக்கிழமை, தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர், போடி அரசு மருத்துவமனை முன்பு இட்லிக் கடை வைத்து விற்பனை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.