சென்னை: பெருங்களத்தூர் அல்லது தாம்பரம் ஏரி என்று அவ்வூர் மக்களால் அடையாளப்படுத்தப்படும் ஏரியின் ஆயுள் காலம் மெல்ல குறைந்து வரும் நிலையில், அதன் மரணத்தை ஊக்குவிக்க, அனைத்துக் காரணிகளும் கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
தாம்பரம் ஏரியில் தண்ணீர் என்னவோ இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதன் ஒரு சொட்டு நீரைக் கூட கண்ணால் காண முடியாத அளவுக்கு ஆகாய தாமரை படர்ந்திருக்கிறது. இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் கழிவுநீர் பெருக்கெடுத்து வந்து ஏரியில் கலந்துவிடுகிறது.
இதையும் படிக்க | 15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?
பிறகென்ன, ஆகாய தாமரைக்கு சொல்லவா வேண்டும். ஏரி தண்ணீரை விரைவாக ஆவியாக்கி எலும்புக்கூடாக மாற்ற ஆயத்தமாகி வருகிறது. மறுபக்கம், ஏரியின் நிலப்பரப்பை தங்கள் வீட்டு பரப்பாக்கிக் கொள்ள அருகில் இருக்கும் அனைவரும் முயன்று.. ஏரியை சுருக்கி குளமாக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
இப்படி, ஏரியின் மரணத்துக்கு பத்துப் பொருத்தமும் பக்காவாக இருப்பதால், ஏரியை மீட்கும் எந்த முயற்சியும் கைகொடுப்பதில்லை.
ஆனால் ஒன்று, சென்னையில் இப்படி ஒரே ஒரு ஏரிதான் மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏற்கனவே செத்து செத்து விளையாடிக்கொண்டிருக்கும் ஏரிகள் ஏராளம். திருநீர்மலை, செம்பாக்கம், நாராயணபுரம், பல்லாவரம், சிட்லப்பாக்கம் என அனைத்துப் பகுதிகளுக்குமே சொல்லி ரத்தக் கண்ணீர் வடிக்க தலா ஒரு ஏரிகள் மரணத்தை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கின்றன.
இதையும் படிக்க.. காலாண்டு விடுமுறை: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு
இந்த ஏரிகளுக்கும், தாம்பரம் ஏரி போலத்தான், கழிவுநீர் கலப்பு, ஆகாய தாமரை, நில ஆக்ரமிப்பு போன்றவை மரணத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஏரி தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட்டது. ஆனால், அதனால் ஒரு பயனும் ஏற்படாத வகையில், மேற்கண்ட மூன்று காரணிகளும், மீண்டும் ஏரியை மரணப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிட்டன.
இப்போது பருவமழைக் காலம் தொடங்கிவிட்டால், இந்தப் பகுதி மக்கள் அனைவரும் கலங்கி நிற்பது என்னவோ, மழை நீருக்குத்தான். அந்த ஏரிக்குச் செல்ல வேண்டிய தண்ணீருக்குத் தெரியுமே.. அந்த ஏரி எவ்வளவு பெரியது என்று, மழை பெய்ததும், ஏரி தண்ணீர் தனது பரப்பளவைக் காட்டிக்கொடுத்துவிடுமே என்றுதான் கலங்கி நிற்கிறார்கள்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கடல் போல விரிந்து பரந்து, மழைக் காலங்களில் முழுமையாக தண்ணீர் நிரம்பி காணப்படும் தாம்பரம் ஏரி இன்று குட்டையாக மாறியிருப்பதற்கு அப்பகுதி மக்கள் பலரும் தங்களது கவலையையும் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதற்கு இணையாக, இவ்வாறுள்ள ஏரிகளை சுத்தப்படுத்தி, அதில் மழை நீர் சென்றடைவதற்கான பணிகளையும் அரசு முன்னெடுத்து, ஆக்ரமிப்புகளை இடித்துத் தள்ளி, நீர்நிலைகளுக்கு உயிரூட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது.