திருநெல்வேலி: தமிழக சிறைகளில் உள்ள சிறை கைதிகளுக்கு கரோனா பரவலைத் தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மதுரை சரக சிறைத்துறை டிஐஜி த. பழனி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் கரோனா விழிப்புணர்வு பேரணியை புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசின் உத்தரவுப்படி சிறைத்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாளையங்கோட்டை மத்திய சிறை சார்பில் நான்காவது கட்டமாக கரோனா விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இப்பேரணியில் சிறைக்காவலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
சிறைகளில் உள்ள கைதிகளும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. அனைத்து கைதிகளுக்கும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. கைதிகள் மூலம் லட்சக்கணக்கான முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கிளை சிறைகளில் ஒரு சிலருக்கு சலுகைகள் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு விவகாரத்தில் சிலர் தங்களது சுய விருப்பு வெறுப்பு கருத்துக்களை பரப்பி விட்டு விடுகிறார்கள். விதி மீறல்களை தடுக்க சிறைத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இருப்பினும் புகார்கள் என்று வந்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணைக் கைதி காசிக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தால் உரிய விசாரணை நடத்தப்படும்.
தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மூலிகை பண்ணை ஆகியவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தும் சிறை அங்காடி மூலம் விற்பனை செய்யப்படும்.
சிறைகளில் அளிக்கப்படும் தொழில் பயிற்சி மூலம் சிறைவாசிகளின் மன அழுத்தம் குறைந்து வருகிறது. தண்டனை காலம் முடிந்த பின்பு அவர்கள் வெளியே செல்லும்போது திருந்தி வாழவும், தொழில் செய்து வருவாய் ஈட்டிக் கொள்ளவதற்கு சிறந்த வழியாக திகழ்கிறது.
கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசும் திட்டம் உள்ளிட்டவற்றால் செல்லிடப்பேசி கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் குறைந்துள்ளன.
போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட அனைத்து விதிமீறல்களையும் கண்காணிக்கவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.