புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட நடிகர் மனோஜ் பாஜ்பாயி, அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் 13-14 ஆண்டுகளுக்கு முன்பே இரவு உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாகக் கூறியிருந்தார்.
இதைக் கேட்ட பலருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். இதற்கான காரணத்தையும் அவர் கூறியிருந்தார். அதாவது, தனது தாத்தா, எப்போதும் ஒல்லியான தேகத்துடன் ஆரோக்கியமாக இருந்ததாவும், அவரைப் பின்பற்றியே தானும் இரவு உணவை தவிர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
உடனடியாக இது தொடர்பான விவாதங்கள் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் வெகுவாக அலசப்பட்டது.
ஆனால், இதுபற்றி பல புகழ்பெற்ற நபர்களுக்கும் உணவு முறைகளை பரிந்துரைக்கும் நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அதில் பொதுவாகக் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், நீண்ட இடைவெளிக்கு முந்தைய இரவு உணவை தவிர்ப்பது சரியல்ல, அவ்வாறு தவிர்ப்பது அனைவருக்கும் பொருந்தும் முறையும் அல்ல, இந்த முறை தனிப்பட்ட நபர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறையைஅடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள்.
அதாவது, மனோஜ் பாஜ்பாய் அவர் பின்பற்றும் உணவு முறையை தெரியப்படுத்தியிருக்கிறார். கலோரிகளைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் பல முறைகளில் இதுவும் ஒன்று. சிலருக்கு இது நன்கு பொருந்தும். ஆனால், உடல் நலப் பிரச்னைகள் ஏதேனும் இருப்பவர்களுக்கு இரு பொருந்தாது. எனவே மருத்துவரை ஆலோசித்தே இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்கிறார்கள்.
மேலும், ஒரு உடலுக்கு கிட்டத்தட்ட 15 மணி நேரம் உணவு கொடுக்காமல் அதனை துன்புறுத்தக் கூடாது. உணவு இடைவேளை இந்த அளவுக்கு அதிகமாக இருந்தால் அது சிலருக்கு ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அதிகபட்சம் 12 மணி நேரம் உணவு இடைவேளை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்கிறார்கள் உணவுபரிந்துரை நிபுணர்கள்.
இறுதியாக மற்றும் பொதுவாக மக்களுக்கு மருத்துவ மற்றும் உணவு முறை நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு அல்லது வயிறை காலியாக வைத்துவிட்டு படுப்பதைவிடவும், மிகவும் எளிதான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் சிறந்தது என்கிறார்கள்.
ஆனால், இரவு உணவை தவிர்ப்பது என்று முடிவு செய்துவிட்டால், அதனை மிகச் சரியான முறையில் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதோடு மற்றொரு தகவலாக, உடல் ஆரோக்கியம் அல்லது உடல் எடைக்காக ஏதேனும் ஒருவேளை உணவை தவிர்ப்பதாக இருந்தால், காலை உணவை தவிர்ப்பதற்கு பதிலாக இரவு உணவை தவிர்க்கலாம் என்பதே பொதுவாக நிலைப்பாடாகவும் உள்ளது.