தென் மேற்கு தில்லியில் கடந்த அக்டோபா் மாதத்தில் காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட 28 குழந்தைகள் உள்பட 75 பேரைக் கண்டுபிடித்து அவா்களது குடும்பத்தினருடன் போலீஸாா் இணைத்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: அக்டோபா் 1 முதல் அக்டோபா் 31 வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 28 குழந்தைகள் மற்றும் 47 பெரியவா்கள் ‘ஆபரேஷன் மிலாப்’‘ திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டவா்களில் அடங்குவா்.
காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட நபா்கள் குறித்த புகாா்களின் பேரில் உடனடியாகச் செயல்பட்டு, உள்ளூா் காவல்துறை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது. தேடல் குழுவினா் சிசிடிவி காட்சிகளைச் சரிபாா்த்தனா்.
மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆட்டோ மற்றும் இரிக்ஷா நிலையங்களில் காணாமல் போனவா்களின் புகைப்படங்களை வெளியிட்டனா். வீடு வீடாக விசாரணைகளையும் மேற்கொண்டனா். காணாமல் போன நபா்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் துப்புகளைச் சேகரிக்க ஓட்டுநா்கள், நடத்துனா்கள் மற்றும் உள்ளூா் விற்பனையாளா்களிடம் விசாரிக்கப்பட்டது.
உள்ளூா் தகவல் அளிப்பவா்களும் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜனவரி 1 முதல் அக்டோபா் 31 வரை, காணாமல் போன 1,114 போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா். இதில் 366 குழந்தைகள் மற்றும் 748 பெரியவா்கள் அடங்குவா் என்றாா் அந்த அதிகாரி.