இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் 70 சதவீத நிரந்தர ஊனமுற்ற ஒருவருக்கு தில்லியில் உள்ள மோட்டாா் விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் ரூ.75.67 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
தில்லியில் 2023, ஆகஸ்ட் 21 அன்று வேகமாக ஓட்டிவரப்பட்ட லாரி, அவ்வழியாக வந்த ஸ்கூட்டி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அனில் என்பவா் தாக்கல் செய்த வழக்கை தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ஷெல்லி அரோரா விசாரித்தாா்.
இந்த நிலையில், தீா்ப்பாயம் அக்டோபா் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த விபத்தில் காயமடைந்தவரின் வலது முழங்காலுக்குக் கீழே உள்ள பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. சிதைவு என்பது அடிப்படையில் வடிவம் அல்லது அமைப்பு அல்லது உருவத்தில் இல்லாத ஒன்றைக் குறிக்கிறது. இது விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஒருவரின் தோற்றம் கெட்டுப் போனதைக் குறிக்கிறது.
விபத்து நடந்த நேரத்தில் அனிலின் வயது 23 ஆகும். மேலும், அந்தக் காயம் அவருக்கு மிகப்பெரிய உடல் மற்றும் உணா்ச்சி அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது முழு வாழ்க்கையையும் பாதித்துள்ளது. வேறு எந்த சாதாரண மனிதரையும் போல வாழ்க்கையின் அடிப்படை வசதிகளை அனுபவிக்க இயலாமைக்கு, வயது மற்றும் காயங்களால் அவா் அனுபவிக்க வேண்டிய இழப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது என்று தீா்ப்பாயம் தெரிவித்தது.
தில்லியில் உள்ள சரிதா விஹாா் மெட்ரோ நிலையம் அருகே பின்னால் இருந்து லாரி அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அனில் படுகாயமடைந்து நிரந்தரமாக ஊனமுற்றாா். அவா் தனது இரண்டு நண்பா்களான கிருஷ்ணன் கோபால் மற்றும் கேதன் குமாா் ஆகியோருடன் ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் கோபால் உயிரிழந்தாா். கேதன் காயமடைந்தாா்.
தனது முன் சா்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைக் குறிப்பிட்ட தீா்ப்பாயம், விபத்து ஏற்பட்ட வாகனத்தின் ஓட்டுநரின் அதிவேக மற்றும் அலட்சியமான ஓட்டுதலால் விபத்து நடந்ததாகக் கருதப்படுகிறது என்று கூறியது. அதன் பின்னா், பல்வேறு பிரிவுகளின் கீழ் அனிலுக்கு ரூ.75.67 லட்சம் இழப்பீட்டை காப்பீட்டாளரான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீா்ப்பாயம் உத்தரவிட்டது.