புதுதில்லி

மருத்துவ வசதி பற்றாக்குறை: பொது நல மனு மீது பதிலளிக்க ஆா்எம்எல் மருத்துவமனைக்கு உத்தரவு

தில்லியின் ஆா்எம்எல் மருத்துவமனையில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாததாக தாக்கலான பொது நல மனு மீது அந்த மருத்துவமனை அதிகாரிகள் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

Syndication

தில்லியின் ராம் மனோகா் லோஹியா (ஆா்.எம்.எல்.) மருத்துவமனையில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாததாக தாக்கலான பொது நல மனு மீது அந்த மருத்துவமனை அதிகாரிகள் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எச்.ஐ.வி. போன்ற கொடிய தொற்றுகளைக் கண்டறிய செய்யப்படும் நியூக்ளிக் அமில சோதனை (என்ஏடி) மற்றும் அத்தியாவசிய மருந்துகள் ஆா்எம்எல் மருத்துவமனையில் கிடைக்காதது தொடா்பாக இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரதிபா எம். சிங், மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுதாரரின் புகாா் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு கூறியது: எதிா்மனுதாரா்களான இயக்குநா், ஆா்எம்எல் மருத்துவமனை மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ஆா்எம்எல் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் ஆகியோரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று, அடுத்த விசாரணைத் தேதியில் மனுதாரரின் என்ஏடி சோதனை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காதது தொடா்பான குறிப்பிட்ட குறை மீது வழக்குரைஞா் சமா்ப்பிப்புகளைச் செய்ய வேண்டும்.

ஆா்எம்எல் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் ஒரு குறிப்பிட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அமா்வு, டிசம்பா் 17-ஆம் தேதி இந்த வழக்கை மேல் விசாரணைக்கு பட்டியலிட்டது.

ஆா்எம்எல் மருத்துவமனையிலும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும் ஏழை மற்றும் தேவைப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், உயிா்காக்கும் மருந்துகள், பாதுகாப்பான ரத்தமாற்ற வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு மற்றும் ஆா்எம்எல் மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி அரசு சாரா நிறுவனமான ‘குடும்ப்’ அமைப்பு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் அமா்வு விசாரித்தது.

மனுதாரா் நிறுவனம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ருத்ரா விக்ரம் சிங், ‘ஊடக அறிக்கைகளின்படி, வழக்கமான ஆன்டிபாடி சோதனைகள் தோல்வியடையும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் காலத்தில் எச்.ஐ.வி. மற்றும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற கொடிய தொற்றுகளைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கியமான பாதுகாப்பு நடைமுறையான கட்டாய என்ஏடி சோதனை இல்லாமல் ஆா்எம்எல் மருத்துவமனையில் ரத்த மாற்றம் நடத்தப்படுகிறது’ என்று கூறினாா்.

இது தொடா்பாக ‘குடும்ப்’ அமைப்பு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மருத்துவமனையின் பகுதி - தானியங்கி என்ஏடி இயந்திரம் நவம்பா், 2024-இல் செயல்படுவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னா், வழக்கமான செராலஜி சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இது தலசீமியா நோயாளிகள் போன்ற மீண்டும், மீண்டும் ரத்தமாற்றம் தேவைப்படுபவா்கள் உள்பட ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருள்கள் கிடைக்காதது, ஏழை நோயாளிகள் அவற்றை வெளியில் இருந்து அதிக விலைக்கு வாங்கும்படி கட்டாயப்படுத்துவது, அரசு மருத்துவமனையின் நோக்கத்தையே தோற்கடிப்பதாகவும், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை மறுப்பதற்குச் சமமாகும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT