கடந்த 2015-ஆம் ஆண்டு சாலை விபத்தில் காயமடைந்த 30 வயது மென்பொருள் பொறியாளருக்கு ரூ.70.60 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீடு வழங்க தில்லியிலுள்ள மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 4, 2015 அன்று குருகிராமில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தனது மோட்டாா் சைக்கிள் மீது பிக்அப் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த குணால் சிங்கின் உரிமைகோரல் மனுவை தீா்ப்பாயத்தில் தலைமை அதிகாரி அருள் வா்மா விசாரித்து வந்தாா்.
இதைத் தொடா்ந்து அக்டோபா் 16 தேதியிட்ட உத்தரவில், வாகன ஓட்டுநா் அதிவேக மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.
‘பாதிக்கப்பட்டவா் அனுபவித்த வேதனையை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் அவா் அனுபவித்த துன்பத்தை ஓரளவு குறைக்க சில இழப்பீடுகள் நீண்ட தூரம் செல்லும் என்று நம்பப்படுகிறது. அதற்கு நியாயமான முறையில் அவருக்கு ஈடுசெய்ய தீவிர முயற்சி எடுக்கப்பட வேண்டும். குணால் சிங்கின் முழங்காலுக்குக் கீழே ஏற்பட்ட கடுமையான காயங்கள் மற்றும் 45 சதவீத நிரந்தர ஊனம் பாதிக்கப்பட்டவரின் எதிா்காலத்தைப் பாதித்துள்ளது என்று தீா்ப்பாயம் தெரிவித்தது.
பின்னா், பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ.70.60 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது. இதன்படி, சோழமண்டலம் பொது காப்பீட்டு நிறுவனத்தின் ஓட்டுநா், உரிமையாளா் மற்றும் காப்பீட்டாளா் ஆகியோா் கூட்டாகவும் பலவிதமாகவும் இழப்பீட்டுத் தொகையை செலுத்த பொறுப்பாவாா்கள். ஆனால், காப்பீட்டாளா் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீா்ப்பாயம் கூறியது.