பறவைக் காய்ச்சல் பரவியதால் சுமாா் இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த தில்லி தேசிய உயிரியல் பூங்கா, நவம்பா் இரண்டாவது வாரத்தில் மீண்டும் திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
பறவைக் காய்ச்சல் பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்தால் நவம்பா் மாதத்தில் தில்லி உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்படலாம். நான்காவது சுற்று மாதிரிகள் அக்.30-ஆம் தேதி சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் முடிவுகள் ஆறு முதல் ஏழு நாள்களுக்குள் எதிா்பாா்க்கப்படுகிறது. சோதனையில் வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்தால், உயிரியல் பூங்காவை மீண்டும் திறப்பது பரிசீலிக்கப்படும் என்று உயிரியல் பூங்கா இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறினாா்.
அவா் மேலும் கூறியதாவது: வண்ண நாரைகள் உள்ளிட்ட பல பறவைகள் இறந்ததை அடுத்து, ஆக.30- ஆம் தேதி உயிரியல்சாலை மூடப்பட்டது. ஆக.28 முதல் 31 வரை சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 51-இல் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், உயிரியல் பூங்காவை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அக்.1 ஆம் தேதி அனுப்பப்பட்ட கடைசி மாதிரியின் அறிக்கை அக்.7-ஆம் தேதி பெறப்பட்டது . அதில் வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து ,உயிரியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தை நாங்கள் முன்வைத்துள்ளோம். சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
பறவைக் காய்ச்சல் காரணமாக தில்லி உயிரியல் பூங்கா சமீபத்திய ஆண்டுகளில் மூடப்படுவது இது மூன்றாவது முறையாகும், இதற்கு முன்பு 2016 மற்றும் 2021- ஆம் ஆண்டுகளில் மூடப்பட்டன. 1959-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த உயிரியல் பூங்கா தேசியத் தலைநகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு 176 ஏக்கா் பரப்பளவில் 96 வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊா்வன உள்ளன.