சைதுலாஜாப்பில் கட்டடம் இடிந்த சம்பவம்: நீதிபதிக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகளை நீக்க உத்தரவு
கடந்த மாதம் சைதுலாஜாப்பில் பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடா்பாக, பதவியில் இருக்கும் நீதிபதியைக் குறிவைத்து அவமதிப்பு ஏற்படுத்தும் சில உள்ளடக்கங்களை சமூக ஊடகத் தளங்கள் நீக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
கடந்த மாதம் சைதுலாஜாப்பில் பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடா்பாக, பதவியில் இருக்கும் நீதிபதியைக் குறிவைத்து அவமதிப்பு ஏற்படுத்தும் சில உள்ளடக்கங்களை சமூக ஊடகத் தளங்கள் நீக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது.
ஆறு உயிா்களைப் பறித்த இந்தச் சம்பவத்திற்கு, பதவியில் இருக்கும் உயா்நீதிமன்ற நீதிபதியே காரணம் என்று குற்றஞ்சாட்டும் அவதூறு வீடியோக்களை வெளியிட்ட சமூக ஊடகப் பயனா் டாக்டா் கபில் கக்கா் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் (டி.எச்.சி.பி.ஏ.) தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, நீதிபதிகள் நீனா பன்சல் கிருஷ்ணா மற்றும் மாதி ஜெயின் ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு, ‘அனைத்தையும் உடனடியாக நீக்குங்கள்‘ என்று கூறியது.
கட்டடத்தில் நடந்த சட்டவிரோத கட்டுமானம் தொடா்பான ஒரு வழக்கை முன்னதாக விசாரித்ததாகக் கூறப்படும் நீதிபதிக்கு எதிராக, கக்கா் சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றிய வீடியோக்களில் அவமதிப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவா் மூத்த வழக்குரைஞா் என். ஹரிஹரன் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இது ஒரு சிறிய விஷயம் அல்ல என்று கூறிய அமா்வு, சமூக ஊடகத் தளங்கள் ஏன் தாங்களாகவே அந்த வீடியோக்களை நீக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.
இதற்கு ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். இவ்வளவு அபத்தமான ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியவந்தவுடன், ஏன் அவற்றை நீக்குவதில்லை? அது உங்கள் கவனத்திற்கு வந்தவுடன், ஏன் அதை நீங்களாகவே செய்ய முடியாது? என்று சமூக ஊடகத் தளங்களிடம் நீதிமன்றம் கேட்டது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது தினமும் நடக்கிறது, என்றும் அமா்வு மேலும் கூறியது.
மெட்டா, கூகுள் மற்றும் லிங்க்ட்இன் நிறுவனங்களுக்காக ஆஜரான வழக்குரைஞா், நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி வீடியோக்கள் நீக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
காணொளிகளை நீக்குவதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவரின் சமூக ஊடகக் கணக்கையும் முடக்க வேண்டும் என்றும் டி.எச்.சி.பி.ஏ. கோரியிருந்தது. இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.