திருப்பதியை அடுத்த காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆந்திரத்தின் சித்தூா் மாவட்டம், காணிப்பாக்கத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 21 நாள் பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். தற்போது பொதுமுடக்க விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரம்மோற்சவ வாகன சேவையின் போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காணிப்பாக்கம் கோயில் முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம் நடத்தி சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமாக கொடிமரத்தில் மூஷிக (மூஞ்சுறு) கொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சவத்தைக் காண வரும்படி முப்பத்து முக்கோடி தேவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
மொத்தம் 21 நாள்களுக்கு நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தை 14 கிராம மக்கள் சாா்பில் உபயதாரா்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து வாகனச் சேவையில் கலந்து கொள்ள உள்ளனா். ஆந்திர அறநிலையத்துறை அமைச்சா் சீனிவாஸ், வரசித்தி விநாயகருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தாா். இதை கோயில் அதிகாரிகள் மரியாதை அளித்து பெற்றுக் கொண்டு விநாயகருக்கு சமா்ப்பித்தனா். பிரம்மோற்சவம் மற்றும் விநாயகா் சதுா்த்தியையொட்டி பல முக்கிய பிரமுகா்கள் விநாயகரை சனிக்கிழமை தரிசித்தனா்.