திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட முத்தங்கி கவசம், கிரீடம் ஆகியவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்போரூர் கந்தசாமி கோயிலில் முருகருக்கு விழாக் காலங்களில் முத்தங்கி சேவை அலங்காரத்துக்காக புதிதாக ரூ. 2 லட்சம் மதிப்பில் முத்தங்கி கவசம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் நற்சோனை கூறியதாவது: அறுபடை வீடுகளில் பழனியில் மட்டுமே பட்டுவஸ்திரத்தில் முத்துகள் பதித்த கவசத்தால் முருகருக்கு முத்தங்கி சேவை நடைபெற்று வருகிறது.
முருகப்பெருமான் நீரிலும், நிலத்திலும் நின்று போர்புரிந்த வரலாற்றைப் போன்று, விண்ணில் நின்று போர்புரிந்த தலமான திருப்போரூர் கந்தசாமி கோயில் முருகருக்கு மூத்த வீடுகளில் இடம்பெறவில்லை.
எனினும், திருப்போரூர் கந்தசாமிக்கு பிரம்மோற்சவ காலங்களில் முத்தங்கி சேவைக்காக இந்துசமய அறநிலையத் துறை ஆணையரின் அனுமதி பெற்று, சோமாஸ்கந்தருக்கு பஞ்சலோகத்தில் பிரபையுடன் கூடிய பீடம் செய்து கொடுத்த சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த இ.சண்முகத்திடம் கேட்டிருந்தோம்.
அப்போது அவர் செய்து தருவதாகக் கூறினார். அதன்படி, முருகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு கிரீடங்களுடன் கூடிய ரூ. 2 லட்சம் மதிப்பில் பட்டுவஸ்திரத்தில் முத்துக்கள் பதித்த, முத்தங்கி சேவைக்கான கவசங்கள், கிரீடங்களை செய்து கோயிலில் வியாழக்கிழமை ஒப்படைத்தார்.
அவற்றை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதையடுத்து முத்தங்கி கவசம் கோயிலில் பாதுகாப்பான பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.