விவாதமேடை

நிர்பயா நிதியில் ஒரு ரூபாயைக்கூட சில மாநிலங்கள் செலவழிக்கவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது குறித்து  என்ன கருதுகிறீர்கள்' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

உண்மைதான்
நிர்பயா நிதியை மாநிலங்கள் செலவழிக்கவில்லை என்பது உண்மைதான். மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நிதி பெறுவதில் காலதாமதமாவதைக் கருத்தில் கொண்டு, நிர்பயா  திட்டங்களை மாநிலங்கள் செயல்படுத்த முன் வருவதில்லை. இதற்கான நடைமுறைகளை மத்திய அரசு எளிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம், மகளிர் காவல் நிலையங்களில்  தன்னார்வலர்களை நியமித்தல், மகளிர் உதவி அமைப்புகளை நிறுவுதல் போன்றவற்றுக்கான கருத்துருக்களை விரைந்து அமைச்சர்கள் மூலம் அனுப்பி, நிதியை துரிதமாகப்  பெற்றால் சரியான முறையில் செலவழிக்க ஏதுவாகும்.
ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.

ஏற்புடையது அல்ல!
நிர்பயா நிதியிலிருந்து ஒரு ரூபாய்கூட செலவு செய்யாமல் முற்றாக நிராகரிப்பது ஏற்புடையது அல்ல. அப்படி இருப்பதற்கு ஏதுவாக அந்த மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக எந்த வன்முறையும் நடைபெறாமல் உள்ளனவா என்ற கேள்வியை முன்னிறுத்த வேண்டும். அரசு வழங்கும் நிதிகளை முறையாகப் பயன்படுத்தி, மக்கள் நலனை உறுதி செய்வதே தலையாய கடமை என மாநில நிர்வாகம் செயல்பட வேண்டும்.
பா.சக்திவேல், கோயம்புத்தூர். 

மத்திய அரசின் கடமை
"நிர்பயா' நிதியை எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் மாநிலங்களுக்குத் தேவைப்படலாம். ஏனென்றால்,  அது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. பெண்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து மாறுபடும் எண்ணம் மாநிலங்களுக்குக் கிடையாது. நிதி ஒதுக்கியதை பயன்படுத்தவில்லை எனக் காரணம் கூறிவரும் மத்திய அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் மேற்படி செலவினத்திற்கு நிதி ஒதுக்காமல் இருக்கக் கூடாது. மாறாக, வழிகாட்டுதலை வழங்கி செலவு செய்ய வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. 
கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

நியாயமானதே...
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியிருப்பது  ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்றுதான்.  "நிர்பயா' என்ற பெண்ணுக்கு  நிகழ்ந்ததை  நாடே பார்த்துக் கவலைப்பட்டது. அதற்காக பணம் திரட்டப்பட்டு, அது செலவு செய்யப்பட்டதா என்று  மற்றவர்களுக்குத் தெரியாத நிலையில், இந்தக் கேள்வியை மத்திய அமைச்சர்  எழுப்பி இருப்பது நியாயமானதே. அந்த  நிதியில் பள்ளி, கல்லூரிகளில்  பெண்களுக்கு  பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி  இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால்,  நிர்பயா போன்று  சில பெண்கள் இது போன்ற கொடுமைக்குள்ளாவதால்  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு  எழுந்த இந்தக் கேள்வி,  இந்தியாவில் உள்ள பலருடைய மனதின் குரல்.  மத்திய அமைச்சரின் கருத்து வரவேற்கப்பட வேண்டியதுதான்.
உஷா முத்துராமன், மதுரை.  

முனைப்பிருந்தால் மட்டுமே...
அரசு எந்த  ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கினாலும், முதலில் மக்களின் வரவேற்பு அவசியம்; மேலும், ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகளின் ஆதரவும், அரசு நிர்வாகத்தின் முழுமையான முனைப்பும் இருந்தால் மட்டுமே "நிர்பயா நிதி' போன்ற நலத் திட்டங்கள் கடைக்கோடி கிராமங்கள் வரைக்கும் கிடைக்க வழி ஏற்படும்.
இரா.கிரிதரன், மதுரை.

பெருமை அல்ல!
கடந்த நான்கு ஆண்டுகளில் நிர்பயா நிதியை ரூ.190 கோடி ஒதுக்கியதில், ரூ.6 கோடி மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளது. மீதியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டது. முழுத் தொகையையும் பயன்படுத்தினால் 151 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 22 போக்úஸா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது போக இன்னும் பல வழக்குகளின் கணக்கை அதிகரித்துக் காட்டியாக வேண்டும். நிர்பயா நிதியை சில மாநிலங்கள் செலவிடவில்லை என்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. அப்படியானால், நிறைய வழக்குகளை எதிர்பார்க்கிறார்களா? "நிர்பயா' போன்றவர்களுக்காக செலவிடுவது நமக்குப் பெருமையில்லை.  மேலும், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாது இருக்கும் மாநிலங்களுக்குப் பரிசுகள் வழங்கலாம். 
வி.கே.இராமசாமி, கோயம்புத்தூர்.

நீதியை நிலைநாட்ட...
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில், பெண்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட "நிர்பயா' நிதியில் ஒரு ரூபாயைக்கூட சில மாநிலங்கள் செலவழிக்கவில்லை என்பது இந்தப் பிரச்னையில் அந்த மாநிலங்களின் அலட்சியப் போக்கை அம்பலப்படுத்துகிறது. அனைத்து மாநிலங்களும் நிதியைப் பெற்று நீதியை நிலை நாட்ட வேண்டும்.
பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

மனமில்லையா?
2013 - ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்பயா நிதியை உருவாக்கியது. அந்த ரூ.1649 கோடியில் இன்றுவரை ரூ.147 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதிசெய்யப் பயன்படுத்த வேண்டிய அத்தொகை பணமிருந்தும் மனமில்லாத காரணத்தால் இந்த நிலை. மனமிரங்குவார்களா? செயல்படுத்த வேண்டியவர்கள். 
எழிலன், சேலம்.

காரணம் என்ன?
நிர்பயா நிதியைப் பயன்படுத்தி உதவிபெற விண்ணப்பிக்கப் பெண்கள் மிகவும் தயங்குவார்கள். "பாலியல் விஷயத்தில் நான் பாதிக்கப்பட்டேன்' என்று உதவிபெற வரும் பெண்ணின் விவரம் வெளியே தெரிந்தால், அவர்களின் நிம்மதியான வாழ்க்கை பாதிக்கும். இது மானப் பிரச்னை. எனவே, இந்த நிதியைப் பெற பெரும்பாலோர் முன்வரவில்லை. 
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

நிர்ப்பந்திக்காதது ஏன்?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013-இல் இந்த நிதித் திட்டத்தை கொண்டுவந்தது முதல் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், மாநில அரசுகளை மத்திய அரசு இந்த விஷயத்தில் நிர்பந்திக்கவில்லையே ஏன்? பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோர்க்கு இதுவரை அளித்தது போக மீதியையும் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதைப் புள்ளி விவரம் எடுத்து அனைவருக்கும் உதவ அரசுகள் முன்வர வேண்டும். 
அ.கருப்பையா, பொன்னமராவதி.

செலவிடப்படாதது ஏன்?
பொதுவாக மாநிலங்கள் தங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள பணத்தை அதற்கென்றே செலவு செய்வது வழக்கம். எடுத்துக்காட்டாக,"சாலை விரிவாக்கம்' தலைப்பில் உள்ள பணத்தை, குறிப்பிட்ட ஆண்டில் செலவு செய்யாவிட்டால் வேறு தலைப்புக்கு மாற்றி செலவு செய்யும் வழக்கம் உண்டு. ஆனால், மத்திய அரசு வழங்கும் பணத்தை அப்படி செலவு செய்ய இயலாது. குறிப்பிட்ட செலவுக்கு என்று ஒதுக்கிய பணத்தை, குறிப்பிட்ட காலத்தில் செலவு செய்யாமல் இருந்தால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் மாநிலத்துக்கு ஏற்படுகிறது. இதைத்தான் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார். 
குரு.பழனிசாமி, கோயம்புத்தூர்.

அக்கறை இல்லை!
நிர்பயா நிதியில் ஒரு ரூபாயைக்கூட சில மாநிலங்கள் செலவழிக்கவில்லை என்பது உண்மையெனில், மாநில அரசுகளுக்கு மக்கள் மேல் உண்மையில் அக்கறை இல்லை என்பதே பொருள். மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே நினைக்கின்றனர். கண்காணிப்புக் கேமராக்கள், பெண்கள் பாதுகாப்புக்கு இரவு ரோந்து முதலியன எதுவுமே நடைபெறவில்லை என்பதிலிருந்து அபாயகரமான நிலையில்தான் பெண்களை ஆளும் கட்சி வைத்திருக்கிறது எனக் கருத வேண்டியுள்ளது.
கி.சந்தானம், மதுரை.

தன்னலம் கருதி...
இன்றைய கால கட்டத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து பணம் செலவழித்தால், தங்களுடைய கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். "நிர்பயா' திட்ட நிதியால் தனிப்பட்ட முறையில் தனக்கு என்ன லாபம் என்றும் நினைக்கின்றனர்.
இ.ராஜு நரசிம்மன், சென்னை.

மெத்தனப்போக்கு
நிர்பயா நிதியில் ஒரு ரூபாயைக் கூட சில மாநிலங்கள் செலவழிக்கவில்லை என மத்திய அமைச்சர் கூறியிருப்பது மக்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் தொகையை, மக்களின் நலம் மேம்பாட்டிற்காக அதை எடுத்துக் கொள்ளாதது என்பதை அமைச்சர் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். சில மாநிலங்களின் மெத்தனப் போக்கும், மக்களுக்குச் சேர வேண்டிய நலத்திட்டங்களை அதன்மீது அக்கறை காட்டாத அவல நிலையை தன் வார்த்தைகளால் தெளிவுபடுத்தி உள்ளார். இது நியாயம்தானே?
சு.இலக்குணசுவாமி, மதுரை.

அதிர்ச்சி அளிக்கிறது
மத்திய அமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால், எல்லோருமே வேண்டுமென்றே நிதியைத் திருப்பி அனுப்பியிருப்பார்கள் என்று தோன்றவில்லை. நிதியைச் செலவழிப்பதில் நிறைய நடைமுறை சாத்தியம் இல்லாத கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் இருந்திருக்கும். இல்லையென்றால், அவர்கள் வசதிப்படி செலவழிக்க வழியில்லாமல் கைகள் கட்டப்பட்டிருக்கும். என்னதான் காரணங்கள் இருந்தாலும், சேவை மனப்பான்மையோடு, நிதியை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கலாம்.
சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

மாநில அரசுகளே...
எந்தெந்த மாநில அரசுகள் மத்திய அரசு ஒதுக்கிய நிர்பயா நிதியை ஒரு ரூபாயைக்கூட செலவழிக்கவில்லை என்பதை மக்கள் மன்றத்துக்குத் தெரியப்படுத்துவதில் தவறு ஏதுமில்லை. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இத்தருணத்தில், இந்தப் புள்ளி விவரம், தேசிய அளவில் கவலைக்குரிய விஷயமாகும். உண்மையைச் சொன்னதற்காக துறை அமைச்சரைப் பாராட்டுவதை விட்டு விட்டு அவரை குற்றஞ்சாட்ட முடியாது. மத்திய அரசு  ஒதுக்கும் நிதியை மாநில அரசுகள் ஒதுக்காமல் பயன்படுத்த முன்வர வேண்டும்.
செ.எழில்வளவன், அரியலூர்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக முதன்முறையாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள்?


இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சம் முறைகேடு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

சேவை பெறும் உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

கோவா: குடிசைகள் மீது பேருந்து மோதி 4 போ் உயிரிழப்பு

இந்தியாவில் இளைஞா்கள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பு-ஆய்வறிக்கையில் தகவல்

மக்களவைத் தோ்தலில் கட்கரிக்கு எதிராகப் பணியாற்றிய மோடி, அமித் ஷா: சஞ்சய் ரெளத் கருத்தால் சா்ச்சை

SCROLL FOR NEXT