ஈரத்தமிழ் பேசும் குரல் - தொகுப்பாளர்கள்; முனைவர்கள் ப. திருஞானசம்பந்தம், அ. மோகனா; பக். 368; ரூ. 450; சந்தியா பதிப்பகம், சென்னை - 83; ✆ 044 - 2489 6979.
சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை கற்றுத் துறைபோகிய பேராசிரியர் ம.பெ. சீனிவாசனின் எண்பதாவது அகவையினையொட்டி வெளியிடப்பட்டிருக்கும் தொகுப்பு நூல் இது. இத்தொகுப்பில், ம.பெ.சீ.க்கு அறிஞர்களின் வழங்கிய வாழ்த்துரைகள், அவரின் இளமைக்கால நண்பர்களின் பாராட்டுரைகள், அவரின் நூல்களுக்கு எழுதப்பட்ட அணிந்துரைகள், அந்நூல்கள் குறித்த அறிஞர்களின் கடிதங்கள் - மதிப்பீடுகள் ஆகியவை அடங்கியுள்ளன.
வைணவ இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட ம.பெ.சீ., ஆழ்வார்கள், கம்பர், இராமாநுஜர் குறித்தும் திவ்விய பிரபந்தம் குறித்தும் ஆய்வு நோக்கிலான நூல்களைப் படைத்துள்ளார்.
'திருமுருகாற்றுப்படை', 'பரிபாடல்' ஆகிய நூல்களுக்கு உரை விளக்கமும் வழங்கியுள்ளார். இவருடைய 'பெரியாழ்வார்' நூல் குறித்துக் குறிப்பிடும் அறிஞர் ம.ரா.போ. குருசாமி, 'இதனைப் படித்தபோது பெரியாழ்வாரே பேனா பிடித்தாரோ என்று ஐயுற்றேன்' எனக் கூறுவதிலிருந்தே ம.பெ.சீ. ஆழ்வார்களை எழுத்தெண்ணிக் கற்றவர் என்பதை அறிய முடிகிறது.
தமிழறிஞர்கள் தெ. ஞானசுந்தரம், ஆ. சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன், ஆ. மணி, வ. ஜெயதேவன் ஆகியோரின் கட்டுரைகள் ம.பெ.சீ.யின் நுண்மாண் நுழைபுலத்தைத் தெற்றெனக் காட்டுகின்றன. குறிப்பாக தெ. ஞானசுந்தரத்தின் 'நம் காலத்து நாதமுனிகள்' கட்டுரை சைவ-வைணவ ஒப்பீட்டாய்வாகவே அமைந்துள்ளது.
தமிழுக்கும் வைணவத்திற்கும் இடையறாது தொண்டாற்றி வரும் பேராசிரியர் ம.பெ. சீனிவாசனின் பேருருவைக் காட்டும் இந்நூல், தமிழுலகம் 'பெறலரும் பரிசில்' என்பதில் ஐயமில்லை. விரிப்பின் அகலும். சுருங்கக் கூறின் 'தமிழிலக்கிய ஆய்வாளர்கள் இவரது தடம் பற்றி நடப்பார்களாக' எனும் பேராசிரியர் தொ. பரம சிவனின் கூற்றைத் தயங்காமல் வழிமொழியலாம்.