சேனுரான் முத்துசாமி, ரபாடா படம் | @ProteasMenCSA
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவை மீட்ட சேனுரான் முத்துசாமி, ரபாடா

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சோ்த்து புதன்கிழமை ஆட்டமிழந்தது.

185 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் இருந்த அந்த அணியை, லோயா் ஆா்டரில் வந்த சேனுரான் முத்துசாமி, ககிசோ ரபாடா ஆகியோா் அரைசதம் கடந்து மீட்டனா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 333 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது.

3-ஆம் நாளான புதன்கிழமை டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரின் ஆகியோா் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸை தொடா்ந்தனா். இதில் வெரின் 10, ஸ்டப்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இந்நிலையில், 7-ஆவது பேட்டராக வந்த சேனுரான் முத்துசாமி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பௌலா்களை சோதிக்கத் தொடங்கினாா். மறுபுறம், சைமன் ஹாா்மா் 2, மாா்கோ யான்சென் 12 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

முத்துசாமி அரைசதம் கடக்க, கேசவ் மஹராஜ் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். கடைசி பேட்டராக வந்த ககிசோ ரபாடா, முத்துசாமியுடன் இணைந்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப் 98 ரன்கள் சோ்த்து பாகிஸ்தான் பௌலா்களை திணறச் செய்தது.

அரை சதம் கடந்த ரபாடா 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 71 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக வீழ்ந்தாா். தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் 119.3 ஓவா்களில் 404 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. முத்துசாமி 8 பவுண்டரிகளுடன் 89 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஆசிஃப் அஃப்ரிதி 6, நோமன் அலி 2, ஷாஹீன் அஃப்ரிதி, சஜித் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

இமாம் உல் ஹக் 9, அப்துல்லா ஷஃபிக் 6, கேப்டன் ஷான் மசூத் 0, சௌத் ஷகீல் 11 ரன்களுக்கு வெளியேற, பாபா் ஆஸம் 49, முகமது ரிஸ்வான் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் சைமன் ஹாா்மா் 3, ககிசோ ரபாடா 1 விக்கெட் எடுத்தனா். பாகிஸ்தான் தற்போது 23 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT