ஸ்பெஷல்

ஆண்டர்சன் 600 : செயற்கரிய செய்வார் பெரியர்!

ச. ந. கண்ணன்

ஒரு வேகப்பந்து வீச்சாளர் 100 டெஸ்டுகள் விளையாடினாலே அது நம்பமுடியாத செயலாக இன்று பார்க்கப்படுகிறது. 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துவிட்டால் அது வரலாற்றுச் சாதனை.

ஆனால் இந்த இரு உயரங்களையும் தாண்டி புதிதாக இன்னொரு இலக்கை தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு நிர்ணயித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

156 டெஸ்டுகள் விளையாடியதோடு 600 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கிற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இப்போதைக்கு இவருடைய சாதனையை உடைக்கும் வல்லமை மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடுக்கு மட்டுமே உண்டு. தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் அவர் மட்டுமே 500 விக்கெட்டுகளை எடுத்து இன்னும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான மெக்ராத், வால்ஷ் ஆகியோரால் கூட 500 விக்கெட்டுகளைத் தாண்ட முடிந்ததே தவிர 600 விக்கெட்டுகள் என்கிற இலக்கை நெருங்க முடியவில்லை.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள்

ஆண்டர்சன் - 600
மெக்ராத் - 563
வால்ஷ் - 519
பிராட் - 514
ஸ்டெய்ன் - 439

ஆண்டர்சன் பற்றி பிபிசி பேட்டியில் மெக்ராத் இவ்வாறு கூறினார். ஆண்டர்சனுக்கு நிகரான திறமை என்னிடம் கிடையாது. அவர் இருபுறமும் பந்தை ஸ்விங் செய்வார். அதில் அவருக்கு உள்ள கட்டுப்பாடு வேறு யாராலும் அவரை விடவும் சிறப்பாகச் செய்துவிட முடியாது. சச்சின் போல உயரத்தை அதிகப்படுத்தி விட்டார். சச்சின் போல யாரும் அதிக டெஸ்டுகளில் விளையாடப் போவதில்லை, அதிக ரன்கள் எடுக்கப் போவதில்லை. வேகப்பந்து வீச்சாளர்களில் ஆண்டர்சனை இவ்வாறு கூறலாம் என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தால் நீண்ட நாள் விளையாடுவது கடினம் என்பார்கள். ஆனால் ஆண்டர்சனுக்கு வயதாகிறதா என்றே சந்தேகமாக உள்ளது. எப்போது பார்த்தாலும் இங்கிலாந்து அணியில் விளையாடிக் கொண்டே இருக்கிறார். உடற்தகுதியிலும் ஆட்ட நுணுக்கங்களிலும் அதிகக் கவனம் செலுத்தி, பெரிய கனவுகளைக் கொண்டிருந்ததாலும் தான் அவரால் அதிக டெஸ்டுகளில் விளையாட முடிந்துள்ளது. அதிகப் பந்துகளை வீச முடிந்துள்ளது.

டெஸ்ட்: அதிகப் பந்துகளை வீசிய வேகப்பந்து வீச்சாளர்கள்

ஆண்டர்சன் - 33,717 பந்துகள் (156 டெஸ்டுகள்)
வால்ஷ் - 30,019 பந்துகள் (132 டெஸ்டுகள்)
மெக்ராத் - 29,248 பந்துகள் (124 டெஸ்டுகள்)
பிராட் - 28,985 பந்துகள் (143 டெஸ்டுகள்)
கபில் தேவ் - 27,740 பந்துகள் (131 டெஸ்டுகள்)

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ஆறு வருடங்களில் ஆண்டர்சனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. திடீரென நன்றாகப் பந்துவீசுவார், திடீரென இவரா இப்படிப் பந்துவீசுகிறார் என எண்ண வைப்பார். ஆனால் இவருக்கான முக்கியத்துவம் இங்கிலாந்து அணியில் இருந்தது. இங்கிலாந்து கேப்டன்கள் இவருடைய திறமையில் நம்பிக்கை வைத்தார்கள். 2005 ஆஷஸை வென்ற இங்கிலாந்து அணிக்குத் தொய்வு ஏற்பட்டபோது ஆண்டர்சனுக்கு அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. 2006-ல் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். ஆனால் 2007-08 நியூசிலாந்துச் சுற்றுப்பயணத்தில் ஆண்டர்சனும் பிராடும் முதல்முறையாக இணைந்தார்கள். இந்தக் கூட்டணியால் இருவருக்குமே ஏராளமான பலன்கள் கிடைத்தன. இதற்குப் பிறகு இருவருமே மளமளவென விக்கெட்டுகளை எடுத்து வந்தார்கள். இருவருக்குமே வேட்கைக் குணம் இன்றுவரை குறையவில்லை.

குறைந்த பந்துகளில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தவர்கள்

முரளிதரன் - 101 டெஸ்டுகள் - 33,711 பந்துகள்
ஆண்டர்சன் - 156 டெஸ்டுகள் - 33,717 பந்துகள்
ஷேன் வார்னே - 126 விக்கெட்டுகள் - 34,919 பந்துகள்
அனில் கும்ப்ளே - 124 டெஸ்டுகள் - 38,494 பந்துகள்

2003-ல்(லேயே) டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஆண்டர்சன். வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் வயதாக ஆக சோர்வு ஏற்படும், தளர்வு ஏற்படும், வேகம் குறையும், திறமை குறையும், அதனால் வாய்ப்புகளும் குறையும், 20களில் ஓடி ஆடியது போல செயலாற்ற முடியாது. ஆனால், ஆண்டர்சன் இந்தப் பொதுக் கருத்துகளை எளிதாக உடைத்துள்ளார். வயதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. வயதாக வயதாகத்தான் அவருடைய திறமை மேலும் பளிச்சிடுகிறது. எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறார்.

2003-ல் தொடங்கிய ஆண்டர்சன், தனது 300-வது விக்கெட்டை 2013-ல் லார்ட்ஸ் மைதானத்தில் எடுத்தார். அடுத்த ஏழு வருடங்களில் இன்னொரு 300 விக்கெட்டுகளை எடுத்துவிட்டார். எவ்வளவு வேகம்!

ஆண்டர்சன்: டெஸ்ட் கிரிக்கெட்

2003-09: 44 டெஸ்டுகள், 148 விக்கெட்டுகள், சராசரி 34.85, ஸ்டிரைக் ரேட் 60.7, 7 முறை 5 விக்கெட்டுகள்
2010-13: 47 டெஸ்டுகள், 192 விக்கெட்டுகள், சராசரி 27.34, ஸ்டிரைக் ரேட் 58.0, 8 முறை 5 விக்கெட்டுகள்
2014 முதல்: 65 டெஸ்டுகள், 260 விக்கெட்டுகள், சராசரி 21.71, ஸ்டிரைக் ரேட் 52.2, 13 முறை 5 விக்கெட்டுகள்

முதல் 44 டெஸ்டுகளுக்கும் கடைசி 65 டெஸ்டுகளுக்கும் தான் எத்தனை வேறுபாடு! ஸ்டிரைக் ரேட் எந்தளவுக்குக் குறைந்துள்ளது!

30 வயதைக் கடந்த பிறகு தான் மைதானத்தில் இவருடைய திட்டங்களும் அதைச் செயல்படுத்தும் விதமும் வேறாக இருந்துள்ளன. ஆண்டர்சனின் 600 விக்கெட்டுகளில் 55% விக்கெட்டுகள் அதாவது 332 விக்கெட்டுகள், 30 வயதைக் கடந்த பிறகு எடுத்தவை என்பது நம்ப முடியாத புள்ளிவிவரம். வேகப்பந்து வீச்சாளர்களில் வால்ஷ் மட்டுமே 30 வயதைக் கடந்த பிறகு 300 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் 341 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 30 வயதுக்குப் பிறகு மெக்ராத் 287, ஹேட்லி 276, டொனால்ட் 216, அம்புரோஸ் 215 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் பலரையும் பலமுறை வீழ்த்தியுள்ளார் ஆண்டர்சன். சச்சின், வார்னர், மைக்கேல் கிளார்க், அசார் அலி ஆகியோர் 9 முறை ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்துள்ளார்கள். இதனால் இன்றைக்கும் ஆண்டர்சன் பந்துவீசுகிறார் என்றால் பேட்ஸ்மேன்களிடம் ஒரு கூடுதல் எச்சரிக்கை உணர்வு இருக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாராவுடனான உரையாடலில் ஆண்டர்சன் பற்றி சச்சின் கூறியதாவது:

ரிவர்ஸ் ஸ்விங் பந்தும் ரிவர்ஸ் ஆகும் என்பதை முதல் முதலில் பயன்படுத்திய வீரர் ஆண்டர்சன் தான். அவுட்ஸ்விங் வீசுவது போல விரல்களில் பந்தை வைத்துக்கொண்டு திடீரென ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீசுவார்.

எல்லா பேட்ஸ்மேன்களும் அவருடைய மணிக்கட்டைக் கவனிப்பார்கள். அதன் வழியாக இன்ஸ்விங்கர் பந்தை வீசுவது போல காண்பிப்பார். ஆனால் பந்து வேறுவிதமாக வெளிப்படும். 

பேட்ஸ்மேனை அவுட்ஸ்விங்கர் பந்துக்கு விளையாடத் தயார்ப்படுத்துவார். ஆனால் பந்து பிட்ச் ஆனபிறகு வேறுவிதமாக உங்களைத் தாண்டிச் செல்லும். இது எனக்குப் புதிதாக இருந்தது.

ஆண்டர்சனின் பந்துவீச்சு முறையை வேறு யாரும் பயன்படுத்தியதில்லை. தற்போது ஸ்டூவர்ட் பிராடும் அதே போல வீசப் பார்க்கிறார். ஆனால் இதை எப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டார் ஆண்டர்சன். எனவே அவரை மிகவும் உயர்வாகக் கருதுகிறேன். ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீசுவதில் மிகத் திறமையானவர் எனப் பாராட்டு தெரிவித்தார்.

இன்று விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்களில் எத்தனை பேர் ஆண்டர்சனின் சாதனையைத் தொட முடியும் என நினைக்கிறீர்கள்? இந்தப் பட்டிலைப் பார்க்கும்போது பிராடைத் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. முக்கியக் காரணம், இவர்களில் பலரும் தொடர்ந்து டி20 ஆட்டங்களிலும் விளையாடி வருகிறார்கள். இதனால் வேலைப் பளு காரணமாக இவர்களால் ஆண்டர்சன் போல பல வருடங்கள், பல டெஸ்டுகளில் விளையாட முடியாமல் போகலாம். அதனால் 600 விக்கெட்டுகள் என்பது இவர்களுக்கு எட்ட முடியாத உயரமாகவே இருக்கும். 

ஆண்டர்சன் - 38 வயது - 600 விக்கெட்டுகள்
பிராட் - 34 வயது - 514 விக்கெட்டுகள்
இஷாந்த் சர்மா - 31 வயது - 297 விக்கெட்டுகள் 
செளதி - 31 வயது - 284 விக்கெட்டுகள்
போல்ட் - 31 வயது - 267 விக்கெட்டுகள்
ஸ்டார்க் - 30 வயது - 244 விக்கெட்டுகள்

ஆண்டர்சன் இத்தனை டெஸ்டுகளில் விளையாடி, இத்தனை விக்கெட்டுகள் எடுத்ததற்கு முக்கியக் காரணம் உண்டு.  

இது டி20 யுகம். ஆனால் ஆண்டர்சன் 2009-ல் கடைசியாகச் சர்வதேச டி20 ஆட்டத்தில் விளையாடியிருக்கிறார். 2014-க்குப் பிறகு டி20 பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவில்லை. இதனால் ஒவ்வொரு டெஸ்ட் தொடரின்போதும் புத்தம் புதிய மனிதனாக வந்து விக்கெட்டுகளாக எடுத்துக் குவிக்கிறார்.

மேலும் ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்து அணி தான் அதிக டெஸ்டுகளில் விளையாடுகிறது. இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மவுசு அதிகம். அங்கு டெஸ்ட் மட்டுமே விளையாடி நட்சத்திரங்களாகத் திகழ முடியும் என்பதை ஆண்டர்சனும் பிராடும் நிரூபித்துள்ளார்கள். 

ஓர் இலக்கை அடைந்தவுடன் அடுத்த இலக்கைத் தேடிச் செல்வது தான் சாதனையாளர்களின் வழக்கம். 600 விக்கெட்டுகளை எடுத்த பிறகும் ஆண்டர்சனுக்கு மூச்சு முட்டவில்லை. அடுத்த இலக்கைத் தயார் செய்துவிட்டார். செயற்கரிய செய்வார் பெரியர். அதாவது பிறர் செய்யமுடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள். 

அடுத்த வருடம் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்னும் முடியவில்லை. 700 விக்கெட்டுகளை எடுக்க முடியாத என்ன?! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT