உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதக் கோபத்தில் கடந்த ஜூலை மாதம் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் அம்பட்டி ராயுடு. இந்நிலையில் மனம் மாறி தன்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்தி | மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பும் அம்பத்தி ராயுடு!
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு ராயுடு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியதாவது: ஓய்வு அறிவிப்பை உணர்ச்சிவசப்பட்டு அறிவித்துவிட்டேன். திறமைமிக்க ஹைதராபாத் அணியுடன் இந்த சீஸனில் விளையாட ஆவலாக இருக்கிறேன். செப்டம்பர் 10 முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன். கடினமான நேரத்தில் எனக்குத் துணையாக இருந்து, நான் இன்னமும் நிறைய விளையாடவேண்டியுள்ளது என்பதை உணர்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ், வி.வி.எஸ். லக்ஷ்மண், தேர்வுக்குழுத் தலைவர் நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் நோயல் டேவிட் இதுகுறித்துக் கூறியதாவது: இது நல்ல செய்தி. அவர் இன்னமும் 5 வருடங்கள் விளையாடலாம். இளைஞர்களுக்கு அவர் ஊக்கமாக இருப்பார். கடந்த வருடம் அவர் இல்லாமல் ரஞ்சிப் போட்டியில் நாங்கள் சிரமப்பட்டோம். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாட உள்ளதால் வீரர்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.