செய்திகள்

ரஞ்சியில் களமிறங்கும் கே.எல். ராகுல்: இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கலாமா?

ச. ந. கண்ணன்

நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத கே.எல். ராகுல், மீண்டும் அணியில் இடம்பிடிக்க ரஞ்சி போட்டியின் அரையிறுதியில் விளையாடவுள்ளார்.

கொல்கத்தாவில் பெங்கால் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அரையிறுதியில் கர்நாடக அணிக்காக ராகுல் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 அன்று தொடங்கும் அரையிறுதி ஆட்டத்துக்கான 15 பேர் கொண்ட கர்நாடக அணியில் ராகுல் இடம்பெற்றுள்ளார்.

நியூஸிலாந்திலிருந்து திரும்பிய ராகுல், கர்நாடக அணி விளையாடிய காலிறுதியில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்துக்கொண்டார். எனினும் நியூஸிலாந்திலிருந்து திரும்பியவுடன் மற்றொரு கர்நாடக வீரரான மணிஷ் பாண்டே காலிறுதியில் விளையாடினார். தற்போது ரஞ்சி அரையிறுதியில் களமிறங்கி, இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்கான தனது முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் ராகுல்.

இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் அணியில் ராகுலை மீண்டும் சேர்க்கலாமா வேண்டாமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக உள்ளார்கள். ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் பிரித்வி ஷா நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இடம்பெற்றார். ஷுப்மன் கில் மற்றொரு தொடக்க வீரருக்கான போட்டியில் உள்ள நிலையில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து தொடக்க வீரராக விளையாடும் திட்டத்தில் உள்ளார் ராகுல்.  

27 வயது ராகுல், இதுவரை 36 டெஸ்டுகளில் விளையாடி, 5 சதங்களும் 11 அரை சதங்களும் எடுத்துள்ளார். வெளிநாடுகளில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களிலும் மிக மோசமாக விளையாடினார். இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக அவர்கள் மண்ணில் 12 டெஸ்டுகளில் விளையாடி 1 சதம் மட்டும் எடுத்தார். இன்னும் சொல்லப் போனால் கடைசியாக விளையாடிய 15 டெஸ்டுகளில் ஒரு சதம், ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். இதனால்தான் இந்திய அணியிலிருந்து ஒரேடியாக நீக்கப்பட்டார். ஒருநாள், டி20-யில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி, அணிக்குப் பெரிய பலமாக இருந்தாலும் டெஸ்ட் அணிப் பக்கம் ராகுலைச் சேர்க்கக்கூட இல்லை.

ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மன் கில் என நான்கு பேர் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக விளையாடத் தயாராக உள்ளார்கள். மேலும் ரஞ்சியில் சிறப்பாக விளையாயதோடு இந்திய ஏ அணியிலும் இடம்பெற்று அருமையாக விளையாடி வருகிறார்கள் அபிமன்யூ ஈஸ்வரன், பிரியங் பஞ்சால் ஆகிய இருவரும். இருந்தும் அணியில் இடம் இல்லாததால் இவர்களிருவரையும் எப்படிச் சேர்ப்பது என்று யோசிக்கிறது தேர்வுக்குழு. இந்நிலையில் மீண்டும் ராகுலுக்கு இந்திய அணியில் இடம்கிடைக்குமா எனத் தெரியவில்லை.

ஒருவேளை, ரஞ்சியின் அரையிறுதி, இறுதிச்சுற்றில் ராகுல் மிக நன்றாக விளையாடினால் அது இந்திய அணிக்கு மேலும் சிக்கலையே உருவாக்கும். ஒருநாள், டி20 போல டெஸ்டிலும் நன்றாக விளையாடுவாரோ என்கிற ஆசையை உருவாக்கும். அப்படி அவர்கள் யோசித்தால் அது பிரித்வி ஷா, ஷுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், பிரியங் பஞ்சால் ஆகியோரின் வாய்ப்புகளுக்கு மேலும் சிக்கலையே உருவாக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT