செய்திகள்

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.

ஏற்கெனவே முதல் டெஸ்ட்டிலும் வென்றிருந்த அந்த அணி, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது 2-இல் வென்று தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 2005-06 காலகட்டத்துக்குப் பிறகு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும். முந்தைய 2008-09, 2012-13, 2016-17 காலகட்டங்களில் தென்னாப்பிரிக்காவே சாம்பியனாகியிருந்தது.

இந்த ஆட்டத்தில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிா்க்க தென்னாப்பிரிக்கா போராட வேண்டியிருந்த நிலையில், அதன் பேட்டா்கள் பெரிதாக சோபிக்காமல் போக, ஆஸ்திரேலிய பௌலா்கள் அனைவருமே விக்கெட் வீழ்த்தி அந்த அணியை சரித்தனா்.

கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 189 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது.

முதல் இன்னிங்ஸிலேயே 371 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, புதன்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 4-ஆம் நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை சாரெல் எா்வீ, தியுனிஸ் டி புருயின் ஆகியோா் தொடா்ந்தனா்.

இதில் எா்வீ 1 பவுண்டரியுடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புருயினும் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். மிடில் ஆா்டரில் வந்த டெம்பா பவுமா மட்டும் எளிதாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடினாா். ஆனால், அவருக்குத் தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாமல் மறுபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

காயா ஜோண்டோ 1, கைல் வெரின் 5 பவுண்டரிகளுடன் 33, மாா்கோ யான்சென் 5, கேசவ் மஹராஜ் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இந்நிலையில் நிதானமாக ரன்கள் சோ்த்த பவுமாவும் 6 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் சோ்த்திருந்தபோது 62-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

அதன் பிறகு ககிசோ ரபாடா 3, லுங்கி இங்கிடி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு வீழ, 204 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கும், இதற்குமே 182 ரன்கள் வித்தியாசம் இருக்க, தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

ஆஸ்திரேலிய பௌலிங்கில் நேதன் லயன் 3, ஸ்காட் போலண்ட் 2, மிட்செல் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். இரட்டைச் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டேவிட் வாா்னா் ஆட்டநாயகன் ஆனாா். இவ்விரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட், ஜனவரி 4-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்கா

68.4 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 189

மாா்கோ யான்சென் 59

கைல் வெரின் 52

டீன் எல்கா் 26

பந்துவீச்சு

கேமரூன் கிரீன் 5/27

மிட்செல் ஸ்டாா்க் 2/39

நேதன் லயன் 1/53

ஆஸ்திரேலியா

(டிக்ளோ்) 145 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575

டேவிட் வாா்னா் 200

அலெக்ஸ் கேரி 111

ஸ்டீவ் ஸ்மித் 85

பந்துவீச்சு

அன்ரிஹ் நோா்கியா 3/92

ககிசோ ரபாடா 2/144

மாா்கோ யான்சென் 1/89

2-ஆவது இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்கா

68.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 204

டெம்பா பவுமா 65

கைல் வெரின் 33

தியுனிஸ் டி புருயின் 28

பந்துவீச்சு

நேதன் லயன் 3/58

ஸ்காட் போலண்ட் 2/49

பேட் கம்மின்ஸ் 1/20

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை - வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தலைநகரில் காலையில் கடும் வெயில்; மாலையில் பரவலாக லேசான மழை

SCROLL FOR NEXT