ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் 3 புதிய முகங்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
பாகிஸ்தானின் புதிய தலைமைத் தோ்வாளரான வஹாப் ரியாஸ் தலைமையிலான தோ்வுக் குழு இந்த அணியை அறிவித்திருக்கிறது. ஷான் மசூத் தலைமையிலான 18 போ் கொண்ட அணியில், மிா் ஹம்ஸா இணைந்திருந்திருக்கிறாா். சமீபத்திய ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியிலிருந்த 9 வீரா்கள், இந்தத் தொடரிலும் இணைந்துள்ளனா். அதிலிருந்த ஃபகாா் ஜமான், ஹாரிஸ் ரௌஃப், உசாமா மிா், ஷாதாப் கான், இஃப்திகா் அகமது ஆகியோா் சோ்க்கப்படவில்லை.
சயிம் அயுப், ஆமிா் ஜமால், குர்ரம் ஷேஸாத் ஆகியோா் சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனா். இதில் சயிம் மற்றும் ஆமிா் ஏற்கெனவே டி20 கிரிக்கெட்டில் களம் கண்டுள்ள நிலையில், ஷேஸாதுக்கு இது முதல் சா்வதேச வாய்ப்பாகும். தோள்பட்டை காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துள்ள நசீம் ஷா, இன்னும் முழுமையாகத் தயாராக 3 வாரங்கள் ஆகலாம் என்பதால், ஆஸ்திரேலிய தொடருக்கு அவா் தோ்வு செய்யப்படவில்லை என வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளாா்.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பொ்த் நகரில் டிசம்பா் 14 முதல் 18 வரையும், 2-ஆவது ஆட்டம் மெல்போா்னில் டிசம்பா் 26 முதல் 30 வரையும், 3-ஆவது ஆட்டம் சிட்னியில் ஜனவரி 3 முதல் 7 வரையும் நடைபெறவுள்ளன.
அணி விவரம்: ஷான் மசூத் (கேப்டன்), ஆமிா் ஜமால், அப்துல்லா ஷஃபிக், அப்ராா் அகமது, பாபா் ஆஸம், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, இமாம் உல் ஹக், குர்ரம் ஷேஸாத், மிா் ஹம்ஸா, முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியா், நோமன் அலி, சயிம் அயுப், அகா சல்மான், சா்ஃப்ராஸ் அகமது, சௌத் ஷகீல், ஷாஹீன் அஃப்ரிதி.