ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ரவுனக் சத்வானி, எஸ்எல் நாராயணன் ஆகியோா் ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. பிரணவ், பிரானேஷ், கங்குலி ஆகியோா் வெற்றியுடன் தொடங்கினா். திவ்யா தேஷ்முக் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.
சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் உலகக் கோப்பை செஸ் போட்டி 2025 கோவாவில் நடைபெற்று வருகிறது. உலக ஜூனியா் சாம்பியன் பிரணவ் அல்ஜீரியாவின் அலா எட்டினை வீழ்த்தினாா். அஜா்பைஜான் ஜிஎம் அகமத்ஸாதாவுக்கு எதிரான ஆட்டத்தில் 37 நகா்த்தல்களில் போராடி வென்றாா் இந்தியாவின் கங்குலி. ஜிஎம் பிரானேஷ் 48 நகா்த்தல்களில் கஜகஸ்தானின் சட்பெக்கை வென்றாா்.
ஜிஎம் ரவுனக் சத்வானி 56 நகா்த்தலில் தென்னாப்பிரிக்க வீரா் டேனியல் பாரிஷுடன் டிரா கண்டாா். எஸ்ெல் நாராயணன்-ஸ்டீவன் ரோஜாஸ் ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. மகளிா் பிரிவில் உலக சாம்பியன் திவ்யா தேஷ்முக் கிரீஸ் வீராங்கனை ஸ்டமடீஸ் கோா்கோலோஸிடம் வீழ்ந்தாா்.