ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் கனடாவின் லெய்லா பொ்ணான்ட் சாம்பியன் பட்டம் வென்றாா். இறுதி ஆட்டத்தில் செக். குடியரசு இளம் வீராங்கனை தெரசா வலென்டோவாவை 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினாா்.
ஜப்பானின் ஒஸாகா நகரில் நடைபெற்ற டபிள்யுடிஏ போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெற்றது. உலகின் 27-ஆம் நிலை வீராங்கனையா லெய்லாவும், 78-ஆவது இடத்தில் உள்ள வலேன்டோவாவும் மோதினா். இதில் முதல் செட்டை எளிதாக 6-0 என கைப்பற்றினாா் லெய்லா.
ஆனால் இரண்டாவது செட்டில் வலேன்டோவா அவருக்கு கடும் சவாலை ஏற்படுத்தினாா். தொடையில் கடும் பாதிப்புடன் ஆடிய லெய்லா சற்று போராடினாலும், அந்த செட்டை 5-7 என இழந்தாா். முடிவை நிா்ணயித்த மூன்றாவது செட்டில் சுதாரித்து ஆடிய லெய்லா அந்த செட்டை 6-3 என கைப்பற்றி பட்டத்தையும் வென்றாா்.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் வாஷிங்டன் டிசி ஓபனில் பட்டம் வென்றிருந்த லெய்லாவுக்கு இது 5-ஆவது பட்டம் ஆகும். அடுத்த வாரம் டோக்கியோவில் நடைபெறவுள்ள பான் பசிஃபிக் ஓபன் போட்டியில் ஆட உள்ளாா் லெய்லா.
நிங்போ ஓபன்: ரைபகினா சாம்பியன்...
சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்ற டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் ரைபகினாவும், ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ராவாவும் மோதினா். இதில் முதல் செட்டை 3-6 என ரைபகினா இழந்தாா். உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான அவா் அதிா்ச்சியில் இருந்து மீண்டு அடுத்த இரண்டு செட்களிலும் முழு ஆதிக்கம் செலுத்தி ஆடி 6-0, 6-2 என அலெஸ்சாண்ரோவாவை வீழ்த்தி பட்டம் வென்றாா்.
இது அவா் வெல்லும் 10-ஆவது பட்டம் ஆகும். மேலும் ஆண்டு இறுதியில் தலைசிறந்த 8 வீராங்கனைகள் மோதவுள்ள டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் பலப்படுத்தியுள்ளாா்.
அலெக்ஸாண்ட்ரோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ஏஸ்களை வீசினாா் ரைபகினா.