முகப்பு
தமிழ்நாடு

பின்லாந்து பேராசிரியருக்கு "கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது'

சென்னை, ஏப்.3: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலாவுக்கு "கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்

Updated On : 20 செப்டம்பர் 2012, 12:38 pm IST
பகிர்:

சென்னை, ஏப்.3: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலாவுக்கு "கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுடன் ரூ.10 லட்சம் பொற்கிழி, மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்படும் என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' நிறுவ ரூ.1 கோடியை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

Advertisement

Advertisement

இந்த அறக்கட்டளையின் சார்பில், பண்டைய தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துகளை ஆராய்ந்து, செம்மொழித் தமிழாய்வுக்கு சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்துக்கு "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' ஆண்டுதோறும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2009-ம் ஆண்டுக்குரிய விருதுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 130 பரிந்துரைகள் வரப்பெற்றன.

இதில் விருதுக்குத் தகுதியானவரைத் தேர்வு செய்ய முதல்வர் கருணாநிதி, அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, நீதிபதி எஸ்.மோகன், செக்கோஸ்லோவாகியா நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் ஜரோஸ்லாவ் வாசெக், கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை கூடியது.

இந்தக் கூட்டத்தில் பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலாவுக்கு 2009-ம் ஆண்டுக்கான "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' வழங்குவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

அஸ்கோ பார்ப்போலா... இவர் பின்லாந்து நாட்டு ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சிந்து சமவெளி நாகரிக எழுத்துச் சிக்கலைத் தீர்க்க அரும்பாடுபட்டவர் பேராசிரியர் பார்ப்போலா.

÷சிந்து சமவெளிப் பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதை 1968 முதல் வலியுறுத்தி வருகிறார். சிந்து சமவெளி எழுத்தாய்வை ஆழமாகவும், விரிவாகவும் மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தால் உந்தப்பட்டு, திராவிட மொழியியலையும், பழந்தமிழையும் பழுதறக் கற்றுத் தேர்ந்தவர்.

அஸ்கோ பார்ப்போலாவுக்கு இந்த விருது கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வழங்கப்படும் என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலா. 2009-ம் ஆண்டுக்கான "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெறுபவரைத் தேர்வு செய்யும் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி,

கவிஞர் அப்துல் ரகுமான், கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நீதிபதி மோகன், செக்கோஸ்லோவாகியா நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜரோஸ்லாவ் வாசெக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.