முகப்பு
தமிழ்நாடு

கால்நடை மருத்துவக் கிளை நிலையங்கள் அதிகரிக்கப்படுமா?

கோவை, பிப். 26: தமிழகம் முழுவதும் உள்ள 3 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க குக்கிராமங்களில் போதுமான கால்நடை மருத்துவக் கிளை நிலையங்கள் இல்லை. இந்த நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வ

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:20 PM
பகிர்:

கோவை, பிப். 26: தமிழகம் முழுவதும் உள்ள 3 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க குக்கிராமங்களில் போதுமான கால்நடை மருத்துவக் கிளை நிலையங்கள் இல்லை.

இந்த நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 2007-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கறவை மாடுகள் எண்ணிக்கை 1.12 கோடி, எருமைகள் - 20.09 லட்சம், செம்மறியாடுகள் - 79.91 லட்சம், வெள்ளாடுகள் - 92.75 லட்சம், குதிரைகள் - 6 ஆயிரம், கழுதைகள் - 5 ஆயிரம், பன்றிகள் - 2.84 லட்சம் என மொத்தம் 3.07 கோடி கால்நடைகள் உள்ளன.

இது தவிர, பண்ணை மற்றும் நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை 12.81 கோடி என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும் அதிகரிக்கும்:÷இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஆண்டுக்கு 12 ஆயிரம் கறவை மாடுகள் வீதம் 5 ஆண்டுகளுக்கு 60 ஆயிரம் மாடுகள் வழங்கப்படவுள்ளன. நடப்பாண்டில் 12 ஆயிரம் மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல, ஆண்டுக்கு 1.20 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகள் வீதம், 5 ஆண்டுகளில் 6 லட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் 24 லட்சம் ஆடுகள் வழங்கப்படும். நடப்பாண்டில் 4.80 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் காரணமாக, தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கால்நடை பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கு மாநிலத்தில் 6 பல்நோக்கு கால்நடை மருத்துவமனைகள், 22 கால்நடை பெரு மருத்துவமனைகள், 139 கால்நடை மருத்துவமனைகள், 1,651 கால்நடை மருந்தகங்கள், 55 நடமாடும் கால்நடை மருந்தகங்கள், 1,485 கால்நடை மருத்துவக் கிளை நிலையங்கள் உள்ளன.

கடந்த ஆண்டுகளில், குக்கிராமங்களில் உள்ள 1,485 கால்நடை கிளை நிலையங்களில், 585 கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தரம் உயர்த்தப்பட்ட கிளை நிலையங்களுக்கும், கால்நடை மருந்தகங்களில் காலியாக உள்ள 288 பணியிடங்களுக்கும் என மொத்தம் 873 கால்நடை உதவி மருத்துவர்களைப் பணியில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது, ஆண்டுக்கு 350 கால்நடை ஆய்வாளர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 1050 ஆய்வாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அதிகரிக்கப்படுமா?... குக்கிராமங்களில் 8 கி.மீ. தூரத்துக்கு ஒரு கால்நடை மருத்துவக் கிளை நிலையம் இருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. ஆனால், ஆயிரக்கணக்கான குக்கிராமங்களில் கால்நடை மருத்துவக் கிளை நிலையங்கள் அமைக்கப்படவில்லை.

மேலும், கால்நடை கிளை நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்போது, அருகில் மருத்துவ வசதி கிடைக்காத குக்கிராமங்களில் புதிதாக கால்நடை கிளை நிலையங்கள் தொடங்க வேண்டும் என்ற அரசாணையும் பல இடங்களில் செயல்படுத்தப்படவில்லை.

தாராபுரம்-குண்டடத்துக்கு இடைய 19 கி.மீ. தூரம் உள்ளது. இடைப்பட்ட கிரமாங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க பல கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல, பல குக்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அருகில் கால்நடை மருத்துவக் கிளை நிலையம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

குறைந்தபட்சம், 2,236 கால்நடை மருத்துவக் கிளை நிலையங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

இதுகுறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் கே.ராமசாமி கூறியது:

கால்நடை வளர்ப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என மாநில திட்டக் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், குக்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் சிரமங்களைத் தவிர்க்க 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு கால்நடை மருத்துவக் கிளை நிலையம் அமைக்க வேண்டும். திருப்பூர்-வேளம்பட்டிக்கு இடையே 20 கி.மீ. தூரம் உள்ளது.

இதற்கு இடையே உள்ள குக்கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கால்நடை கிளை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கறவை மாடுகளைப் பராமரிக்கவும், கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், மக்கள்தொகைக்கு ஏற்ப பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →