முகப்பு
தமிழ்நாடு

பாலியல் குற்றங்களுக்கு மேற்கத்திய கலாசாரமே காரணம்: அசோக் சிங்கல்

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமே காரணம் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கல் தெரிவித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமே காரணம் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கல் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது: பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளுக்கு மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமே காரணம்.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமது பாரத பண்பாட்டை அழித்துவிட்டு மேற்கத்திய கலாசாரத்தை புகுத்த வேண்டும் என்பதற்காகவே 200 ஆண்டுகளுக்கு முன்பு மெக்காலே கல்வித் திட்டத்தை ஆங்கில ஆட்சியாளர்கள் கொண்டு வந்தார்கள்.

அதன் விளைவாக பெண்களை கடவுளாக மதிக்கும் கலாசாரம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்தல் போன்ற மேற்கத்திய கலாசார சீர்கேடுகள் அதிகரித்துள்ளன.

இதனால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அலாகாபாதில் நடைபெறும் கும்பமேளாவில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்த துறவியர்களும், பொதுமக்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

கும்பமேளாவை முன்னிட்டு நடைபெறும் துறவியர்கள் மாநாட்டில் பசுவதை தடைச் சட்டம், மதமாற்ற தடைச் சட்டம், ஸ்ரீராமஜென்ம பூமி பிரச்னை உள்பட ஹிந்து சமுதாயம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க இருக்கிறோம்.

புத்த மதத் தலைவர் தலாய் லாமா மற்றும் சீக்கிய, ஜைன மதத்தினரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்தியாவில் ஹிந்துக்களின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.

அடுத்த 30 ஆண்டுகளில் ஹிந்துக்களின் எண்ணிக்கை மற்ற மதத்தினரைவிட குறைந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார் அசோக் சிங்கல்.

பேட்டியின்போது விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் ராகவ் ரெட்டி, வட தமிழகத் தலைவர் மெய்யப்பன், தென் தமிழகத் தலைவர் குப்புராமு, மாநிலச் செயலாளர் சு. சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →