எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, ஈரான் நாட்டுக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர், வியாழக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர், கீழக்கரையைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 15 பேர், துபையில் மீன்பிடி ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். இவர்கள், அங்கு 3 படகுகளில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாக ஈரான் நாட்டுக் கடற்படையினரால் கடந்த 27.12.2016 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அந்நாட்டின் கீஸ் தீவுப் பகுதியில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் எம். கருணாமூர்த்தி தலைமையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனிடையே, துபையைச் சேர்ந்த 3 படகுகளின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையான ரூ. 20 லட்சத்தை செலுத்தி, அவர்களை மீட்டார். அதன் பின்னர், மீனவர்கள் கடந்த 28.5.2017 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் மூலம் வியாழக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினர்.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் எம். கருணாமூர்த்தி தலைமையில் ஊர் திரும்பிய மீனவர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனை சந்தித்து அரசுகள் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ஆட்சியர், மீனவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் சு. சமீரன், துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் ஆகியோரும் இருந்தனர்.
இதுகுறித்து ஈரான் சிறையிலிருந்து விடுதலையான மீனவரான ராமேசுவரத்தைச் சேர்ந்த நம்பு மகன் பாலமுருகன் (29) என்பவர் கூறியது:
நாங்கள் சென்ற படகுகளிலேயே பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்தோம். ஈரான் ராணுவத்தினர் பல வகையிலும் எங்களை சித்திரவதை செய்தனர். குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை. எங்களிடம் இருந்த செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர்.
நாங்கள் பணிபுரிந்த நிறுவன உரிமையாளர் அபராதத் தொகையான ரூ. 20 லட்சத்தை செலுத்தியதாலும், அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவும் தாயகம் திரும்ப முடிந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.