சிவகங்கை மாவட்டம் கீழடியில் நூலகம் மற்றும் காட்சிக்கூடம் அமைக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனித்தன்மை வாய்ந்த, பொருள் சார்ந்த நூலகங்கள், காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும். சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம், காட்சிக்கூடம் ஆகியன சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்படும்.
தமிழிசை, நடனம், நுண்கலைகள் குறித்து தஞ்சாவூரிலும், நாட்டுப்புறக் கலைகள் சார்ந்து மதுரையிலும், தமிழ் மருத்துவம் சார்ந்து திருநெல்வேலியிலும், பழங்குடியினர் பண்பாடு சார்ந்து நீலகிரியிலும், கணிதம், அறிவியல் சார்ந்து திருச்சியிலும், வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்து கோவையிலும், அச்சுக்கலை சார்ந்து சென்னையிலும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.
மதுரையில் மாபெரும் நூலகம்: மதுரையில் ஒரு லட்சம் நூல்கள் அடங்கிய மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும். இந்த நூலகம் குழந்தைகளுக்கான தனிப்பிரிவு, போட்டித் தேர்வு பயிற்சி மையம், சுயநூல் வாசிப்புப் பிரிவு ஆகியன உள்ளடக்கியதாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். கோவை, கரூர், வேலூர், திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களைத் தொடர்ந்து, மீதமுள்ள 24 மாவட்டங்களிலும் அந்த மையங்கள் தொடங்கப்படும்.
மின் நூலகம்: அரிய நூல்கள், ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் ஆகியவற்றை மின்மயமாக்கி அனைத்து நூலகங்களுக்கும் பொதுவான அட்டவணையினை உள்ளடக்கிய நவீன மின் நூலகம் அமைக்கப்படும்.
அரிய நூல்கள், ஆவணங்களை பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடம் இருந்து பெற்று பாதுகாத்து பயன்படுத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழில் மொழிபெயர்ப்பு: சிறந்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படும். மேலும் உலகின் மிகச்சிறந்த பிற மொழி இலக்கியங்களையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படும். பள்ளி அளவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே செல்லும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளாக ஏற்பாடு செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.