மத்திய சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி வரி) விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டன.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனும் சரக்கு, சேவை வரி வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறியதாவது:
ஜிஎஸ்டி மூலம் ஜவுளித் தொழிலுக்கும் அது சார்ந்த நிறுவனங்களுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் வேஷ்டி, சேலை, ஜாடா, மல்லு போன்ற ரகங்களுக்கு ஏற்கெனவே வரி விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினோம். இதில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இந்தப் போராட்டம் காரணமாக ரூ. 30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர் அசோசியேஷன், ஈரோடு, வீரப்பன் சத்திரம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம், ஈரோடு, இந்திரா நகர் பகுதி வணிகர் சங்கம், ஈரோடு மல் ஜவுளி வியாபாரிகள் சங்கம், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேஷன், ஈரோடு சலவைப் பட்டறை உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சிதம்பர சரவணன் முன்னிலை வகித்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜவுளிக் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஜவுளிக் கடைகளின் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் காரணமாக, ஈரோடு மாநகரில் இயங்கும் ஜவுளிக் கடைகள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டிருந்தன. இதில், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள ஜவுளிச் சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதேபோல ஈஸ்வரன் கோயில் வீதி, ஆர்.கே.வி. சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஈரோடு மட்டுமன்றி பவானி, மொடக்குறிச்சி, கோபி, பெருந்துறை, சத்தி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.