நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்.எல்.ஏ.க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்துப் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர். இதே விவகாரத்துக்காக காங்கிரஸ் - முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 3 நாள்களாக "டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் அளிக்கப்பட்ட விவகாரம் ஒளிபரப்பாகி வருகிறது என்றார்.
அப்போது பேரவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டுக் கூறியது: என்னுடைய தீர்ப்பை புதன்கிழமையே அளித்துவிட்டேன். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதே விவகாரத்தைத் திரும்பவும் பேச வேண்டியது இல்லை. வேறு விவகாரம் குறித்துப் பேசினால், அதற்கு நிறைய நேரம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரம் நீதிமன்தில் உள்ளது என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை. துரைமுருகன் (எதிர்க்கட்சித் துணைத்தலைவர்): தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது தவறு ஒன்றுமில்லை.
தனபால்: என்னுடைய தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்தில் உள்ளது. அது குறித்து அவையில் பேச முடியாது.
மு.க.ஸ்டாலின்: சட்டப்பேரவை விதி 92-1-ன் கீழ், நீதிமன்தில் நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கில்தான் கருத்துகளைச் சொல்லக்கூடாது என்று இருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்னையைப் பொருத்தவரையில், சென்னை உயர் நீதிமன்தில் ஜூன் 16-ஆம் தேதிதான் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வந்துள்ள செய்திகளை அடிப்படையாக வைத்து, தொடரப்பட்டுள்ள வழக்கை எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு தெரிய வரும். அதனால், எம்.எல்.ஏ.க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் பேசுவது தவறு இல்லை.
தனபால்: தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் வரும் செய்திகளை எல்லாம் ஆதாரமாகக் கொண்டு பேரவையில் விவாதிக்க முடியாது. என்னுடைய தீர்ப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார்.
வெளிநடப்பு: இதனைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதே விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் வெளிநடப்பு செய்தார்.
ஆளுநரைச் சந்திப்போம்: சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது: 89 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்.எல்.ஏ.க்களுக்குப் பணம் அளிக்கப்பட்ட விவகாரத்தை பேரவையில் திமுக எழுப்பாவிட்டால் மக்கள் ஏற்க மாட்டார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். தற்போது அவர் ஊரில் இல்லை. அவர் வந்து நேரம் கொடுத்தால் ஆளுநரிடம் முறையிடுவோம் என்றார். பின்னர், பேரவை நிகழ்வுகளில் திமுகவினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.