மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் மீது 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வரும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல் உள்ளிட்ட உதவி உபகரணங்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை ஜார்ஜ் டவுன் தலைமை அஞ்சலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கம், காது கேளாதோர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்தின்போது, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கப் பொதுச் செயலர் எஸ்.நம்புராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பிரெயில் தட்டச்சு இயந்திரங்கள், வாகனங்கள் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மீது வரி விதிக்க அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு துன்பத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும், அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதிகளுக்கு எதிராகவும் உள்ளது.
எனவே, அரசு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்று உபகரணங்கள் மீதான அதிக வரிவிதிப்பை திரும்பப் பெறவேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.