கவிதை உறவு 45 -ஆவது ஆண்டு விழா மலருடன் (இடமிருந்து) கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் மனைவி சிதம்பரம் அம்மாள், கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன், கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், 
தமிழ்நாடு

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும்: இல.கணேசன்

தாம் அரசியலுக்கு வரவேண்டுமா என்பதை நடிகர் ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

DIN

தாம் அரசியலுக்கு வரவேண்டுமா என்பதை நடிகர் ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கவிதை உறவு 45 -ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாம் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் முடிவு செய்வார் என ரஜினி கூறி வருகிறார். அந்த வகையில் அவர் அரசியலுக்கு வருவாரா எனக்கூற நான் ஆண்டவன் அல்ல, ஆள்பவன். நல்ல நண்பர் என்பதால் ரஜினியை நானும் பலமுறை சந்தித்துள்ளேன். அவர் மீது வைத்துள்ள மதிப்பின் காரணமாகவும், நல்ல தேசியவாதி என்பதாலும் எந்தவொரு கட்சியும் எங்களோடு வாருங்கள் என அவரை கேட்டிருக்கலாம். அதற்கு ரஜினி பதில் கூறியிருக்கிறார். அவரை அரசியலுக்கு அழைத்தது தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால், தான் அரசியலுக்கு வரவேண்டுமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தின் நலனை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு புறக்கணிக்காது. விவசாயிகள் மீது அக்கறை கொண்டுள்ளோம். ஆனால், ஒரு குறிப்பிட்டவர்களை மட்டுமே விவசாயிகளின் பிரதிநிதிகளாக என்னால் கருத இயலாது என்றார் இல.கணேசன்.
சிறந்த நூல்களுக்கு பரிசு: முன்னதாக, சென்னை தியாகராய நகரில் கவிதை உறவு 45-ஆவது ஆண்டு விழா, ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீடு, சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கல் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமை வகித்து கவிதை உறவு ஆண்டு விழா சிறப்பு மலரை வெளிட்டார். இதை திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தொழிலதிபர் டி.விக்டர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
'ஏர்வாடியார் கவிதைகள்' என்ற நூலை கவிஞர் தமிழன்பனும், 'சொந்தமாக ஒரு சொர்க்கம்' என்ற நூலை ரிசர்வ் வங்கியின் முன்னாள் மண்டல இயக்குநர் ஜே.சதக்கத்துல்லா, 'அவளுக்கு வயது 60' நூலை நாவலாசிரியை இந்துமதியும் வெளியிட காந்தி கண்ணதாசன், கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், தொழிலதிபர் எஸ்.மனோகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், 2016 -ஆம் ஆண்டின் சிறந்த நூல்களுக்கான பரிசுகளை டாக்டர்.வி.எஸ்.நடராஜன், பேராசிரியர் மோகன், சாந்தகுமாரிசிவகடாட்சம், எஸ்.பி.கணேசன், கே.வசந்தகுமார் ஆகியோருக்கு வழங்கினார். அதேபோல், கவிக்கோ ஞானச்செல்வன், ஸ்ரீமாதா கேன்சர்கேர் மையத்தின் டாக்டர் விஜயஸ்ரீ, பேராசிரியர் அமுதாபாலகிருஷ்ணன், செல்வமணி, மெய்.மீனாட்சி சுந்தரம், பார்வதி பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு விருதுகளையும் வழங்கினார்.
கவிஞர் முத்துலிங்கம், வழக்குரைஞர் இரா.காந்தி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT