தேச ஒற்றுமையைக் காரணம் காட்டி ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் நாச்சிமுத்து தலைமையில் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டு கனிமொழி பேசியதாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்க்க தைரியம் இல்லாத அரசாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைக்கவே போராடி இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், நீட் தேர்வு என்ற பெயரில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
உலகத்துக்குத் தேவையான கருத்துகளைக் கூறிய தொன்மையான மொழியாகத் தமிழ் திகழ்ந்து வருகிறது. அதே நேரத்தில், ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை, மாறாக மொழித் திணிப்பைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ் மொழியை அழித்து, தமிழர்களின் அடையாளத்தை மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். ஹிந்தி திணிப்பை மீண்டும் கையில் எடுத்தால், ஜல்லிக்கட்டுக்கு எதிராக மாணவர்கள் எவ்வாறு போராடினார்களோ, அதேபோல மொழியைக் காக்கவும் மாணவர்கள் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நா.கார்த்திக், கோவி.செழியன், முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விடுதலை விரும்பி, மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, மாணவரணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கனிமொழி அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யக் கூடிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசாங்கம் செயல்படுவது இல்லை. மத்திய அரசிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழகத்துக்கு விரோதமான, மக்கள் ஏற்றுக் கொள்ளாத திட்டங்களை மாநில அரசு பின்பற்றுகிறது.
மாநில அரசுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் உள்ள ஆர்வம், மக்களைக் காப்பாற்றுவதில் இல்லை. தமிழக மருத்துவர்களை யாரும் தரம் குறைந்த மருத்துவர்களாகப் பார்ப்பதில்லை. நீட் தேர்வால் மட்டுமே தரமான மருத்துவக் கல்வியை கொடுக்க முடியும் என்பது தவறான கருத்து.
நீட் தேர்வை நோக்கியே கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது தவறான முடிவாகும். சமச்சீர் கல்வியின் தரத்தை ஆண்டுதோறும் உயர்த்தி, கல்வியின் தரத்தை பரிசீலிக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமச்சீர் கல்வியின் தரம் உயர்த்த எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.