அரசியல் காரணங்களுக்காகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக சார்பில் சோழிங்கநல்லூரில் குளத்தைத் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் தண்ணீருக்காக பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்பதற்காக திமுக சார்பில் குளங்கள் தூர்வாரப்படுகின்றன.
எதிர்கட்சியாக இருந்து இந்தப் பணிகளை திமுக நிறைவேற்றுவதைப் பார்த்தாவது ஆளும் கட்சியினரும், பிற கட்சியினரும் இந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடுத்தடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காகவே இவ்வாறு சந்தித்து வருகின்றனர். அதிமுகவை இரண்டாக உடைத்துவிட்டு, தற்போது உடைந்த அதிமுகவை ஒன்றாக இணைப்பதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்.
ரூ.89 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வருமான வரித் துறை ஆதாரங்களுடன் கண்டுபிடித்தது. அதில் முதல் பெயராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர்தான் இடம்பெற்றுள்ளது. பிரதமர் அவரை அழைத்து நேரம் கொடுத்து நேரில் சந்திக்கிறார். சேகர் ரெட்டியோடு எல்லா வகையிலும் தொடர்புடைய ஓ.பன்னீர்செல்வத்தையும் அவர் நேரில் அழைத்து பேசுகிறார்.
ஆனால், இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளைச் சந்திக்க பிரதமருக்கு நேரமில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.