பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த நிகழ் நிதியாண்டில் ரூ.522.70 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட உத்தரவு:
பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக, இப்போது புதிதாக பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் பயிர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2016-2017-ஆம் ஆண்டில் 15.20 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு இதற்காக ரூ.487.37 கோடி பிரிமியத்துக்காக மானியம் ஒதுக்கப்பட்டது.
2017-2018-ஆம் நிதியாண்டிலும் அதிகளவு நிலப் பரப்புகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பிரிமியத்துக்கான மானியமாக ரூ.522.70 கோடி ஒதுக்கப்படும் என சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.522.70 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென வேளாண்மைத் துறை இயக்குநரும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு சென்னையைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2017-2018 ஆம் ஆண்டிலும் செயல்படுத்துவதற்காக ரூ.522.70 கோடி நிதி ஒதுக்கி அதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு அளித்துள்ளது என்று தனது உத்தரவில் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.