தமிழ்நாடு

வனத் துறையினரின் அலட்சியத்தால் கருகிய மரக்கன்றுகள்!

வனத் துறையினரின் அலட்சியத்தால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக வழங்கப்பட்ட மரக் கன்றுகள் முறையாக பயன்படுத்தாமல் வெயிலில் கருகிப்போயுள்ளன.

 நமது நிருபர்

வனத் துறையினரின் அலட்சியத்தால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக வழங்கப்பட்ட மரக் கன்றுகள் முறையாக பயன்படுத்தாமல் வெயிலில் கருகிப்போயுள்ளன.

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் 18.33 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காடுகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியோடு காடு வளர்ப்பு திட்டம், நபார்டு காடு வளர்ப்பு திட்டம் என பல்வேறு திட்டங்கள் வனத் துறை சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல், மரம் வளர்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலங்கள், நெடுஞ்சாலை ஓரங்கள், ஏரி, குட்டை போன்ற நீர்நிலைகளிலும் மரக் கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.

தனியார் தரிசு நிலங்களில் புங்கன், ஈட்டி, குமிழ், தான்றி, வேப்பன், தேக்கு போன்ற மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு வனத் துறை சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த மரக் கன்றுகளை வனத் துறை விதை பண்ணைகளில் (நர்சரி தோட்டங்களில்) விதையிட்டு, உரமிட்டு வளர்த்து பயனாளிகளுக்கு வழங்குகின்றன. இந்த மரக் கன்றுகளை விதை பண்ணைகளில் இருந்து வாகனங்களில் ஏற்றி வரும் போக்குவரத்து செலவு, தலை சுமையாக கொண்டு செல்லும் கூலி, மரக் கன்றுகளை வைக்க குழி தோண்ட, உரங்கள் வைக்க, பராமரிக்க, ஊக்கத்தொகை என சராசரியாக ஒரு மரக்கன்றுக்கு ரூ. 50 வரை அரசு செலவு செய்கிறது.

ஒவ்வொரு வனச் சரகத்திலும் வருடத்துக்கு எவ்வளவு மரக் கன்றுகள் வைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. அதற்கேற்ப புள்ளி விவரங்கள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசாங்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மற்றும் பல்வேறு விழா காலங்களை முன்னிட்டு ஒவ்வொரு வனச்சரகத்துக்கும் பல ஆயிரக் கணக்கான மரக்கன்றுகளை வனத்துறையின் விதை பண்ணைகளில் வளர்தெடுக்கப்படும் மரக்கன்றுகளை அனுப்பி வைக்கிறது.

அவ்வாறு, வழங்கப்படும் மரக் கன்றுகளை வனத் துறையினர் கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி அவற்றை வளர்க்க ஊக்கப்படுத்துகின்றனர்.

ஆனால் மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு சரிவர சென்று சேருவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கியதாகவும், அதற்கான பணம் செலவழிக்கப்பட்டதாகவும் வனத் துறையினர் கணக்கெழுதி பணத்தை எடுத்துக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

வனத் துறையின் விதை பண்ணைகளில் இருந்து மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மரக் கன்றுகளை போட்டு விடுவதாகவும், இல்லையெனில் மரக் கன்றுகளை எடுத்துச் சென்று விவசாயிகளின் நிலத்தில் வைத்துவிட்டு, அது குழிதோண்டி வைக்கப்பட்டதா என்பதை கூட கண்காணிக்காமல் அப்படியே விட்டுவிடுவதாகவும் கூறப்படுகிறது. குழிதோண்டுவதற்கும், தோண்டிய குழியில் செடி வைப்பதற்கும், செடி வைப்பதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணத்தை வழங்காமலும் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்காக கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட மரக் கன்றுகள் ஆம்பூர் பகுதியில் முறையாக நடப்படாமல் வெயிலில் கருகி வீணாகி போயுள்ளன. இதற்கு காரணம் வனத்துறையினரின் முறைகேடு தான் எனக் கூறப்படுகிறது.

மரக் கன்றுகள் வழங்கப்பட்ட இத்திட்டம் குறித்து வனத் துறையின் உயரதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT