அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது ஆதரவு மூன்று எம்.எல்.ஏ.-க்கள், ஆறு எம்.பி.-க்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிஷங்கள் வரை நடைபெற்றது. இதன் பின், ஆளுநர் மாளிகை வாயிலில் கூடியிருந்த செய்தியாளர்களை தினகரன் சந்திக்கவில்லை. தனது இல்லத்துக்குச் சென்று அங்கு பேட்டி அளித்தார்.
காத்திருந்த டிடிவி: ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்க டிடிவி தினகரனுக்கு வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் கால்நடை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றிருந்தார். இதைத் தொடர்ந்து, நண்பகல் 12.45 மணியளவில் தனது மாளிகைக்கு ஆளுநர் வந்தார். ஆளுநரைச் சந்திப்பதற்காக நண்பகல் 12.15 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு தினகரன் வந்தார். ஆளுநர் இல்லாததால் சுமார் அரை மணி நேரம் வரை அவர் காத்திருந்தார்.
20 நிமிஷங்கள் சந்திப்பு: இதைத் தொடர்ந்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ், தினகரன் இடையேயான சந்திப்பு நண்பகல் 12.55 மணி முதல் மதியம் 1.15 மணி வரை சுமார் 20 நிமிஷங்கள் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, எம்.எல்.ஏ.-க்கள் ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன், எஸ்.கருணாஸ், எம்.பி.,க்கள் ஏ.பி.நாகராஜன், விஜிலா சத்தியானந்த், செங்குட்டுவன், எம்.உதயகுமார், என்.கோகுலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் பெயர் சந்திப்புக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்தும் அவர் பங்கேற்கவில்லை. தினகரனுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் ஆளுநரைச் சந்தித்தனர்.
முடிவு எடுப்பதாக ஆளுநர் உறுதி: ஆளுநரைச் சந்தித்த பிறகு சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் அளித்த பேட்டி:
எங்களது ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் அளித்த கடிதத்தின் மீது நல்ல முடிவினை எடுப்பதாக ஆளுநர் உறுதி கொடுத்துள்ளார். எங்களது தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் கடந்த 22 -ஆம் தேதி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். கடந்த 5 -ஆம் தேதி அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி) கூட்டிய கூட்டத்தின் மூலமாக அவருக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
குதிரை பேரங்கள் நடக்க இடம் கொடுக்கக் கூடாது என ஆளுநரிடம் வலியுறுத்தினோம். அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெரிகிறது. எனவே, சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கோரினோம். முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே கோரிக்கை. நிலைமைகளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
ஜக்கையன் அணி மாற்றமா? ஜக்கையன் என்னை வந்து சந்தித்த போது, தலைமை நிலையச் செயலாளர் பொறுப்போ, அவைத் தலைவர் பொறுப்போ அளிக்க வேண்டும் என்றார். இப்போது அங்கு (பழனிசாமி அணி) சென்று பேசியுள்ளார் என்றார் தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.