இந்திய, அமெரிக்க நரம்பியல் நிபுணர்கள், பேராசிரியர்கள் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் சென்னையில் வியாழக்கிழமை கையெழுத்தானது.
இந்திய நரம்பியல் நிபுணர்கள் அகாதெமி மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் சர்வதேச நரம்பியல் நிபுணர்கள் மாநாடு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியர் நரம்பியல் நிபுணர்கள் சங்க செயலாளர் டாக்டர் சஞ்சய் பிரதீப் சிங் பேசியது: இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து 4 நரம்பியல் நிபுணர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, நிதியுதவி அளிக்கப்பட்டு அமெரிக்க மருத்துமனைகளில் நரம்பியல் தொடர்பான அனுபவங்களைப் பெறுவதற்கு வழி செய்யப்படும். இருநாடுகளுக்கும் இடையில் பேராசிரியர்கள், நிபுணர்கள் பரிமாற்றம் நடைபெறும் என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவப் பேராசிரியரும், பிரபல நரம்பியல் நிபுணருமான அர்ஜூன் தாஸ், நரம்பியல் துறையைப் பொருத்தவரை, சிகிச்சை குறித்த தரவுகளை சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.
இந்திய நரம்பியல் நிபுணர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஏ.வி.சீனிவாசன், மாநாட்டு ஒருங்கிணைப்புத் தலைவர் டாக்டர் சி.யூ.வேல்முருகேந்திரன், செயலாளர் டாக்டர் யூ.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.