தமிழ்நாடு

உரிமைக் குழு நோட்டீஸ் விவகாரம்: திமுக எம்.எல்.ஏ.-க்கள் மீது செப்.14 வரை நடவடிக்கை இல்லை

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் மீது வரும் 14 - ஆம் தேதி (செப்.14) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பேரவைச்

DIN

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் மீது வரும் 14 - ஆம் தேதி (செப்.14) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 
தடை செய்யப்பட்ட குட்கா தாராளமாக எல்லாக் கடைகளிலும் கிடைப்பதாகக் கூறி, அதனை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு எடுத்துச் சென்று ஆதாரத்துடன் காண்பித்தனர். இந்த செயல் சட்டப்பேரவையின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் குட்கா விவகாரத்தில் 40 நாள்களாக பேரவைத் தலைவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழலில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் தமிழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி ஆளுநரிடம் திமுக முறையிட்ட பிறகு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களுக்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் அமரேந்திர சரண் ஆகியோர் ஆஜராகி, 'குட்காவை பேரவைக்குள் கொண்டு வருவதற்கு பேரவை விதிகளில் எந்தத் தடையும் இல்லை. எனவே, அதனைக் கொண்டு சென்றதால் பேரவையின் மாண்பு குறைந்துவிட்டதாகக் கூறுவது தவறு.
சமூக நலன் சார்ந்த விஷயம்: அதிமுகவின் உள்கட்சி குழப்பத்தின் காரணமாக 40 நாள்கள் கழித்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புற்றுநோயை உருவாக்கும் குட்காவை தடை செய்ய வேண்டுமென்பது சமூக நலன் சார்ந்த விஷயம். அதைத்தான் திமுக உறுப்பினர்கள் செய்துள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதால் அதை பேரவைக்கு கொண்டு வந்து காண்பித்துள்ளனர். இந்த நோட்டீஸின் மூலமாக மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமை பாதிக்கப்பட்டுள்ளது' என வாதிட்டனர்.
அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண்: 'இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை உரிமைக்குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக வாதிக்க வேண்டியுள்ளது. மேலும் சட்டப்பேரவையின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் வரும் செப்டம்பர் 12 -ஆம் தேதி விளக்கம் அளிப்பதாக ஏற்கெனவே திமுக உறுப்பினர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே அவர்கள் தரப்பு விளக்கத்தை அளித்த பிறகு, முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்குரைஞர் கபில்சிபல், 'நோட்டீஸ் அனுப்பியதே தவறு; பிறகு விளக்கம் அளிக்கச் சொன்னால் எப்படி? இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என வாதிட்டார்.
அதற்கு அரசு தலைமை வழக்குரைஞர், 'இந்த வழக்கை வரும் செப்டம்பர் 14 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். அதுவரை திமுக உறுப்பினர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என சட்டப்பேரவைச் செயலாளர் உத்தரவாதம் அளித்துள்ளார்' என்றார்.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் செப்டம்பர் 14 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து,
அதுவரை இந்த பிரச்னை தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT