ஜாக்டோ ஜியோவில் ஒரு பிரிவினர் மட்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ-ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் வியாழக்கிழமை முதல் முதல் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் புதன்கிழமை (செப்.6) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் சிலவற்றை ஏற்று செயல்படுத்த அக்டோபர் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என்று கூறப்பட்டது.
இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகளிடம் முரண்பட்ட கருத்துகள் நிலவின. முதல்வரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக பெரும்பாலான சங்கங்கள் தெரிவித்தன. இருப்பினும் சில சங்கங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தன.
எழிலகத்தில் ஆர்ப்பாட்டம்: இதைத் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகம், அரசு ஊழியர்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்பட முக்கிய நகரங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலை முதல் அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் மாநிலம் முழுவதும் குறைவான ஊழியர்களே போராட்டத்தில் ஈடுபட்டதால் அன்றாட அலுவல்கள் மற்றும் கற்பித்தல் பணிகளில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையைப் பொருத்தவரை எழிலகம், பல்லாவரம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து... இதற்கிடையே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து வியாழக்கிழமை பிற்பகலில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவைச் சேர்ந்த சங்கத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
இது பற்றி போராட்டத்தில் பங்கேற்காத ஜாக்டோ-ஜியோவின் மற்றொரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைகளை நிறைவேற்ற அக்டோபர் 15-ஆம் தேதி வரை அவகாசம் கேட்கப்பட்டது. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தைத் தள்ளி வைத்துள்ளோம். ஊதியக் குழு பரிந்துரையை வரும் செப்டம்பர் 30 -ஆம் தேதி அறிக்கையாகப் பெற்று நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதில் தாமதம் ஏற்பட்டால் 1.10.17 முதல் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக கூறி இருக்கிறார்கள். தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்களை காலமுறை ஊதியமாக மாற்ற பரிசீலனை செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
60 சங்கங்கள் பங்கேற்கவில்லை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை நவம்பர் 30-இல் பெறப்பட்ட பிறகு தான் அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என முடிவு சொல்வதாக முதல்வர் கூறியுள்ளார். அதில் சாதகமான பதில் கிடைக்கவில்லையென்றால் போராட்டத்தை கொண்டு செல்லலாம்.
இந்த மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 60 சங்கங்கள் பங்கேற்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.