பிறந்த தேதியை மாற்றி கூடுதல் பதவி பெற்ற, அரசு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் பதவி வகிக்கத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஆகியோர் 8 வாரத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அசோக்நகர் மாந்தோப்பு காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி எஸ்.பால்வண்ணம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கான துணை முதன்மை ஆய்வாளர் அலுவலகத்தில் தேர்வு நிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து கடந்து 2012-இல் ஓய்வு பெற்றேன்.
இந்நிலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தில் உதவி தொழிற்சாலை ஆய்வாளராக கடந்த 1987 இல் பணியில் சேர்ந்த காளியண்ணன், 1959 மே 25 என அரசு பணிப்பதிவேட்டில் உள்ள தனது பிறந்த தேதியை 1960 செப்டம்பர் 20 என மாற்றும் படி கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அளித்த கோரிக்கையை தமிழக அரசும், மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் நிராகரித்தன. பின்னர் தன் பிறந்த தேதியை மாற்றக்கோரி காளியண்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரது பிறந்த தேதியை மாற்ற உத்தரவிட்டது. இதனால், கடந்த மே மாதம் ஓய்வு பெற வேண்டிய காளியண்ணனுக்கு தற்பேது அரசு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே அவர் அப்பதவி வகிக்கத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த மனுவுக்கு தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர், டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் காளியண்ணன் ஆகியோர் 8 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.