தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தூத்துக்குடி வருகிறார்.
சேலத்திலிருந்து கார் மூலம் வரும் முதல்வருக்கு, மாவட்ட அதிமுக சார்பில் 4 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயில் முன் மாலை 3 மணிக்கும், தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட குறுக்குச்சாலை மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி ஆகிய இடங்களிலும், தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு காய்கனி மார்க்கெட் அருகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெறும் தன்னாட்சி கல்லூரி அறிவிப்பு விழாவில் முதல்வர் கலந்துகொண்டு, தன்னாட்சி கல்லூரியை தொடங்கிவைக்கிறார்.
பின்னர், தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெறும் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் பி.ஏ.ஆறுமுகநயினார் இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கும் முதல்வர், மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
முதல்வருடன் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி உள்ளிட்டோரும் வருகின்றனர். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளுமாறு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். முதல்வர் வருகையையொட்டி பலத்த போலீல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.