முகப்பு
தமிழ்நாடு

அடுத்து வரும் தேர்தலில் ஆன்மிக அரசியலே வெற்றி பெறும்': அர்ஜூன் சம்பத்

தமிழகத்துக்கு அடுத்து வரும் தேர்தலில் ஆன்மிக அரசியலே வெற்றி பெறும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். 

Updated On : 19 ஏப்ரல் 2018, 2:08 am IST
பகிர்:

தமிழகத்துக்கு அடுத்து வரும் தேர்தலில் ஆன்மிக அரசியலே வெற்றி பெறும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். 
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மைக்கென தசா மகா வித்யா ஹோமம் ஏப்ரல் 9 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ ராஜமதங்கி ஹோமம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் காமாட்சியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். 
சுவாமி தரிசனம் செய்த பின்பு, செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியது: தமிழகத்தை ஏதோ ஒரு தனிநாடு போல் சித்தரித்து ஒரு சில பிரிவினை வாத சக்திகள் உருவாக்கி வருகின்றனர். அத்துடன், அவர்கள் ஆன்மிக அரசியல் நடத்தும் ரஜினி மீது அவதூறு கற்பிக்க முயலுகின்றனர். தொடர்ந்து, வெறுப்பு அரசியல் நடத்துகின்றனர். அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் ஆன்மிக அரசியல் வெற்றி பெறும். 
காஞ்சிபுரம் அருகே செயல்படும் ஒரு சில அமைப்புகள் ஆன்மிக சின்னங்களையும், ஆன்மிகவாதிகளையும் தாக்குவது, வன்முறையைத் தூண்டுவது, மாணவர்கள், இளைஞர்களை தீக்குளிப்பு செயலுக்கு தூண்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனைத் தடுக்கும் விதமாக, உளவுத் துறையும், மத்திய அரசும் கண்காணித்து அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அமைப்புகளை தடை செய்ய வேண்டும். திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்த் மீது வெறுப்பு, இனவெறி கொள்கையை பிரசாரம் செய்கின்றனர். ஆன்மிக, தேசிய அரசியலை ஆதரிக்க வேண்டும். ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு பிரசாரம் செய்வோருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 
காவல்துறையை தாக்குவது, சுங்கச் சாவடியை உடைப்பது, மத்திய அரசு அலுவலகங்களை தாக்குவோம், முற்றுகையிடப் போகிறோம் என அறிவிப்பது போன்ற தைரியம் வந்திருப்பது உளவுத்துறையின் இயலாமையை காட்டுகிறது. எனவே, தமிழக முதல்வர், பிரிவினை சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.