தமிழ்நாடு

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல்: பதற்றம் தணிந்ததால் போலீஸ் பாதுகாப்பு தளர்வு

DIN


கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை சம்பவத்தில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருவதால், கமாண்டோ படை வீரர்களுக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டு திங்கள்கிழமை பாதுகாப்பு தளர்த்தப்பட்டது.    
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் விதமாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 
குறிப்பாக கோவை மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய்கள் மூலமும், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
 புறநகரில் இருந்து மாநகருக்குள் நுழையும் 10-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் தீவிரச் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.   மேலும், விடுதிகளில் தங்கியுள்ளவர்களில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 50-க்கும் அதிகமான இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை, சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். அதிவிரைவுப்படை போலீஸார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, மாநகர போலீஸார், கமாண்டோ படையினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 
 பாதுகாப்பு தளர்வு: இந்நிலையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முன்எச்சரிக்கை சம்பவத்தில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியதால் கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு திங்கள்கிழமை தளர்வு செய்யப்பட்டது. கடந்த 3 நாள்களாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
 இந்நிலையில் கமாண்டோ படை, அதிவிரைவுப் படை போலீஸாருக்கு திங்கள்கிழமை தற்காலிகமாக ஓய்வு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு தளர்வு செய்யப்பட்டு 800 போலீஸார் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தவிர விநாயகர் சதுர்த்தி விழா வரையிலும் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள், தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைப்பு: மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்

ரயில் பயணச் சீட்டு விற்பனை உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்குடியில் நகை வியாபாரியிடம் வழிப்பறி: 3 போ் கைது

SCROLL FOR NEXT