தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.,) மக்களுக்கு தனி மயானத்தை அமைத்துக் கொடுப்பது சாதிப் பிரிவினையை தமிழக அரசு ஊக்குவிப்பதுபோல் உள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குப்பன் அண்மையில் விபத்து ஒன்றில் பலியானார்.
இவரது உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு கொண்டு சென்றபோது பொதுப் பாதையை எஸ்.சி., மக்கள் பயன்படுத்தக் கூடாது என சிலர் மறித்துள்ளனர். இதனால் குப்பனின் உடலை கயிறு கட்டி மேம்பாலத்தில் இருந்து கீழே இறக்கி மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளிவந்தது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்தார். இதனையடுத்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வழக்காக நீதிபதிகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீண்டும் அதே அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வட்டாட்சியர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில்மனுவில், இந்த சம்பவம் நடந்த நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எஸ்.சி., பிரிவினருக்கு தனி மயானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த மக்களுக்கென்று, தனி மருத்துவமனையோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ, இல்லாத நிலையில், அவர்களுக்கென்று தனி மயானத்தை மட்டும் அரசு ஏன் அமைத்துக் கொடுக்கிறது, இறந்த உடலில் கூட சாதிப் பாகுபாடா, இதுபோன்று தனிமயானம் அமைப்பதன் மூலம் சாதிப் பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போன்று உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
மேலும் தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பெயர்களை நீக்கி அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு, ஆதிதிராவிடர் நல பள்ளி, கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி என பள்ளிக்கூடத்துக்கு சாதிப் பெயர் வைத்துள்ளதே, இந்தப் பெயர்கள் ஏன் நீக்கப்படவில்லை, என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் புதன்கிழமையன்று அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.