தமிழ்நாடு

நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரம்: புதுவை பேரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

DIN


புதுவை சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கோரி, பேரவையில் இருந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி: சட்டப்பேரவைத் தலைவர் பேரவையை நடுநிலையாக நடத்த மாட்டார் என்று தெரிவித்து, அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். அது எப்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்?.
பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து: அதற்கான காலக்கெடுவுக்குள் ஆய்வு செய்யப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ரங்கசாமி: உங்களால் (பேரவைத் தலைவர்) நடுநிலையாக செயல்பட முடியாது என்பதால், உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல்வர் வே.நாராயணசாமி: 
ஆய்வுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளப்படும்.
ரங்கசாமி: பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாததால், வேறு நபரைக் கொண்டு பேரவையை நடத்த வேண்டும்.
பேரவைத் தலைவர்: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்ள 14 நாள்கள் காலக்கெடு உள்ளது. சட்டப்பேரவை பாரபட்சமின்றி கடமையைச் செய்யும்.
என்.எஸ்.ஜெ.ஜெயபால் (என்.ஆர்.காங்.): நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள ஏன் பயப்படுகிறீர்கள்? அந்தத் தீர்மானம் என்றைக்கு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற தேதியையாவது அறிவிக்க வேண்டும்.
முதல்வர் நாராயணசாமி: பேரவைத் தலைவரை வற்புறுத்தக் கூடாது.
எம்.என்.ஆர்.பாலன் (காங்கிரஸ்): பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்கும்போது, சட்டப்பேரவையை நடத்தக் கூடாது என்று சட்டம் கூறவில்லை. 14 நாள்கள் கால அவகாசம் உள்ளது.
ஆ.அன்பழகன் (அதிமுக): பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை 14 நாள்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் விதி உள்ளது. எனவே, தீர்மானம் அளித்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் எடுத்து விவாதிக்கலாம்.
முதல்வர் நாராயணசாமி: பரிசீலித்து முடிவு எடுப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தபின்னர், தேதி கேட்டு வற்புறுத்தக் கூடாது.
ரங்கசாமி: செய்வது தவறு.
சாமிநாதன் (நியமன உறுப்பினர்): பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாலன்: அரசை விமர்சித்து பேச எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை.
சாமிநாதன்: எங்களுக்கும் சட்டம் தெரியும். நீங்கள் நியமித்து நாங்கள் வரவில்லை. உச்ச நீதிமன்றம் எங்களை நியமித்துள்ளது. அனைத்து அதிகாரமும் வழங்கியுள்ளது.
பேரவைத் தலைவர்: 14 நாள்கள் கால அவகாசம் உள்ளது. எனவே, பேரவையின் அடுத்த அலுவலுக்குச் செல்கிறேன். 
இதையடுத்து, சட்டப் பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாததைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வீர்களா? இல்லையா? என பதில் அளிக்க வேண்டும்.
அமைச்சர் கமலக்கண்ணன்: அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். 
அன்பழகன்: ஏன் பயப்படுகிறீர்கள்?
இதற்கு பதிலளிக்காமல் சட்டப்பேரவைத் தலைவர் அடுத்த அலுவலுக்குச் சென்றார். இதைக் கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் பாஸ்கர், அசனா ஆகியோர் அன்பழகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம், சால்ட் அதிரடி: கொல்கத்தா அணி 222 ரன்கள் குவிப்பு

ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை?

பாரதிராஜா, நட்டி இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில்

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

SCROLL FOR NEXT