நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட கீழவெண்மணி கிராமத்தில் வெண்மணி தியாகிகளின் 51 -ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், பெண்கள் மாணவ, மாணவியர், குழந்தைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் பங்கேற்று நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நெல்மணிக்காக கருகிய சம்பவம்: நாகை மாவட்டம், கீழவெண்மணி கிராமத்தில் 1968 -ஆம் ஆண்டு டிச. 25-ஆம் தேதி, நெல் கூலியை உயர்த்தி வழங்கக் கேரி நடைபெற்ற போராட்டத்தின்போது, நிலச்சுவான்தாரர்களுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்குமிடையே மோதல் உருவானது.
இச்சம்பவத்தின்போது உயிருக்குப் பயந்து ஒரு குடிசை வீட்டில் தஞ்சமடைந்திருந்த 23 குழந்தைகள்,16 பெண்கள், 5 ஆண்கள் உள்ளிட்ட 44 பேர் தீ வைத்து படுகொலை செய்யப்பட்டனர். உலகையே உலுக்கிய இச்சம்பவம் நிகழ்ந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் கீழவெண்மணி கிராமத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து வெண்மணி கிராமத்தில் எரிக்கப்பட்ட ராமயாவின் குடிசை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சவுந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு செங்கோடியை ஏற்றி வைத்து, உயிர் நீத்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் அணி அணியாக வருகைதந்து வீரவணக்க கோஷங்கள் எழுப்பியபடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.