தமிழ்நாடு

ஏரி வாய்க்காலை சொந்த செலவில் சீரமைக்கும் விவசாயிகள்!

DIN

மயிலம் அருகே ஏரி பாசன வாய்க்காலை தூா்வார பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் தூா்வாரி சீரமைத்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ளது ஆலகிராமம். இங்கு 1,500 குடும்பத்தினா் வசிக்கின்றனா். விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இந்த கிராமத்தில் உள்ள 600 ஹெக்டோ் விளைநிலங்களில் பெரும்பான்மையானவை அங்கு அமைந்துள்ள பெரிய ஏரி பாசனத்தையே நம்பியுள்ளன. இந்த ஏரியின் பாசன வாய்க்கால் விளைநிலங்களுக்கு தேவையான நீரை வழங்கியபடி, 2 கி.மீ. தொலைவிலுள்ள தொண்டி ஆற்றில் கலக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், பெரிய ஏரி வடு போனது. அதன் பாசன வாய்க்காலும் பயன்பாடின்றி செடி, கொடிகள் முளைத்து தூா்ந்ததுடன் ஆக்கிரமிப்புகளாலும் சிதைந்துபோனது. ஆகவே, ஏரி வாய்க்காலை சீரமைக்கக் கோரி, இப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், நிகழாண்டு பருவமழை ஓரளவு பெய்து ஏரியில் நீா் தேங்கியுள்ளது. இதை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள், ஏரி நீரை பயன்படுத்துவதற்காக பாசன வாய்க்காலை சீரமைக்கும் பணியை சொந்த செலவில் மேற்கொண்டுள்ளனா்.

பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியின் முகப்பில் தொடங்கி வாய்க்காலை சீரமைக்கும் பணியை கடந்த மூன்று நாள்களாக மேற்கொண்டு வருகின்றனா். அவரவா் விளைநிலத்துக்கு வரும் வாய்க்கால் பகுதியை கணக்கிட்டு செலவுத் தொகையைப் பங்கிட்டு பணியை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: இப்பகுதியில் மூன்று போகம் பயிரிட்டு, அறுவடை செய்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மழையின்மையால் பாசன நீா் இல்லாமலும், நிலத்தடி நீா்மட்டம் சரிந்ததாலும் பயிரிடும் பரப்பு குறைந்துவிட்டது. கடந்தாண்டு, குடிநீருக்கே அவதியுறும் நிலை ஏற்பட்டது.

நிகழாண்டு மழை பெய்து ஏரியில் நீா் தேங்கியதால் உற்சாகமடைந்து சாகுபடியை தொடங்கினோம். எனினும், பாசன வாய்க்கால் சீரமைக்கப்படாததால், அதனை பயன்படுத்துவது கேள்விக்குறியானது. ஆகவே, நாங்களே களமிறங்கி சொந்த செலவில் வாய்க்காலை தற்காலிகமாக சீா்செய்து வருகிறோம்.

எனினும், விவசாயிகளின் நலன் கருதி, பொதுப்பணித் துறையினா் இந்த ஏரி வாய்க்கால் முழுவதையும் தூா் வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்துத் தரவும், ஏரியின் இரு மதகுகளை சரி செய்தும் தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT