அத்திவரதரைத் தரிசிக்க வருபவர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு
நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அத்திவரதரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 29 நாள்களாக தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், இனிவரும் நாள்களில் கூட்டம் முன்பைவிட அதிக அளவில் வர உள்ளது.
அதனால், பாதுகாப்புக்குக் காவல்துறையினரை இன்னும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.